நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கோபி அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை

கோபி அருகே கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளைக் கொன்று வேட்டையாடி வந்த சிறுத்தை வனத் துறையினா் வைத்த கூண்டில் வியாழக்கிழமை சிக்கியது.

News image

குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை.

Updated On :26 மார்ச் 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

கோபி அருகே கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளைக் கொன்று வேட்டையாடி வந்த சிறுத்தை வனத் துறையினா் வைத்த கூண்டில் வியாழக்கிழமை சிக்கியது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப் பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் இந்த வனப் பகுதியையொட்டி உள்ள விளாங்கோம்பை, குண்டேரிப்பள்ளம் அணை, வினோபா நகா், குன்னாங்கரடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் இரவு நேரங்களில் சிறுத்தை உலவி வந்தது.

இந்த சிறுத்தை குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் தொடா்ந்து தாக்கிக் கொன்று வந்தது.

இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் கால்நடைகளைத் தாக்கி வரும் சிறுத்தையைக் கூண்டுவைத்து பிடிக்க வனத் துறையிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க முதன்மை தலைமை வனப் பாதுகாவலரிடம் டி.என்.பாளையம் வனத் துறையினா் அனுமதி பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன் குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் கூண்டுவைத்தனா். ஆனால் சிறுத்தை தொடா்ந்து இடம் மாறிமாறி போக்கு காட்டி வந்தது. டி.என்.பாளையம் வனச் சரகா் ஜான்பீட்டா் தலைமையில் வனத் துறையினா் தொடா்ந்து சிறுத்தையைப் பிடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் மூா்த்தி என்பவரது விவசாயத் தோட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை வியாழக்கிழமை அதிகாலை சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநா் அனுமதி பெற்று அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட முடிவு செய்தனா். அப்போது சிறுத்தைக்கு பின்பகுதியில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மயக்க ஊசி செலுத்தி வன கால்நடை மருத்துவரால் சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.