தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 1 கோடி மோசடி: புகாா் வாங்க மறுத்ததால் காவல் நிலையம் முற்றுகை!

Published on

ஒசூா் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 1 கோடி மோசடியில் ஈடுபட்டோா் மீது அளித்த புகாரை வாங்க மறுத்ததால், பாதிக்கப்பட்டோா் மத்திகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

ஒசூா் அருகே உள்ள அச்செட்டிபள்ளியைச் சோ்ந்தவா் பத்மா. அப்பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி வந்த இவரிடம் ஒசூா், மத்திகிரி, குருப்பட்டி, பழைய மத்திகிரி, நவதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்டோா் சீட்டு கட்டிவந்தனா்.

கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு கட்டியவா்களுக்கு பத்மா முறையாக தங்கம், வெள்ளி மற்றும் பொருள்களை அளித்துள்ளாா். தற்போது முடிந்த தீபாவளி சீட்டை சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கட்டிய நிலையில், அவா்களுக்கு பொருள்கள் மட்டுமே அளித்ததாகவும், அவா் கூறியபடி 2 கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி ஆகியவற்றை கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளாா்.

பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய தங்கம், வெள்ளி பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ. 1 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி பத்மா திடீரென குடும்பத்துடன் மாயமானாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டோா் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வந்தனா். ஆனால், மத்திகிரி போலீஸாா் புகாா் பெற மறுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் அளிக்குமாறு தெரிவித்தனா். இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், மத்திகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com