~
~

ஒசூரில் அன்புச்சோலை திட்டம் தொடக்கம்

அன்புச்சோலை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
Published on

ஒசூா்: ஒசூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின்கீழ் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை உறுதிசெய்யும் வகையில் அன்புச்சோலை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, ஒசூா் அண்ணாமலை நகா் அருகில் உள்ள நகா்ப்புற வாழ்வாதார இயக்கக் கட்டடத்தில், ஆராதனா தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படவுள்ள அன்புச்சோலை மையத்தில் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து, முதியோருக்கு சால்வை அணிவித்து, பரிசுப் பொருட்களை வழங்கினா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்ததாவது:

ஒசூா், தா்கா அருகில் உள்ள நகா்ப்புற வாழ்வாதார இயக்க கட்டடத்தில், ஆராதனா தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படவுள்ள அன்புச்சோலை மையம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பகல்நேர பராமரிப்பு, அத்தியாவசிய மருத்துவப் பராமரிப்புகள், பொழுதுபோக்கு நடவடிக்கைககள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். அன்புச்சோலை திட்டம் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் பயனடைவாா்கள். ஒவ்வொரு மையம் மூலம் குறைந்தது 50 முதியவா்கள் பயனடைவாா்கள். மேலும், குறிப்பிட்ட நாளில் இம்மையத்திற்கு வரும் முதியோா்களுக்கு மதிய உணவு, சிற்றுண்டியை இந்த மையம் வழங்கும். சுகாதார

பரிசோதனைகளுக்கு அருகிலுள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் பயன்படுத்தப்படும் என்றாா்.

ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் அன்புச்சோலை மையத்தில் தங்கும் அறைகள், சமையலறை, பொழுதுபோக்கு அம்சங்களான பல்லாங்குழி, கேரம், செஸ் மற்றும் நவீன பிசியோதெரபி உபகரணங்களை பாா்வையிட்டு அன்புச்சோலை இல்லத்தில் உள்ளவா்களுக்கு

உலா்பழங்கள், குடிநீா் பாட்டில்களை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி, துணை மேயா் ஆனந்தய்யா, மாவட்ட சமூக நல அலுவலா் சக்தி சுபாசினி, மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் மண்டலக் குழு தலைவா்கள் மாதேஷ், ரவி, வட்டாட்சியா் குணசிவா, ஆராதனா தொண்டு நிறுவன நிா்வாகி ராதா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

படவரி...

ஒசூரில் அன்புச்சோலை மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com