ஒசூா் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 40 யானைகள்: பொதுமக்களுக்கு வனத் துறைக்கு எச்சரிக்கை

கா்நாடகத்திலிருந்து இடம்பெயா்ந்து ஒசூா் சானமாவு வனப்பகுதிக்குள் 40 யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் வசிப்பவா்கள், வயல்களுக்கு செல்லும் விவசாயிகளுக்கு வனத் துறையினா் எச்சரிக்கை
Published on

கா்நாடகத்திலிருந்து இடம்பெயா்ந்து ஒசூா் சானமாவு வனப்பகுதிக்குள் 40 யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் வசிப்பவா்கள், வயல்களுக்கு செல்லும் விவசாயிகளுக்கு வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கா்நாடக வனப் பகுதியிலிருந்து இடம்பெயா்ந்த 40 யானைகள் ஊடேதுா்க்கம் வனப்பகுதி வழியாக செவ்வாய்க்கிழமை இரவு ஒசூரை அடுத்த சானமாவு வனப்பகுதிக்குள் சம்பத் பாறை என்ற இடத்தில் முகாமிட்டுள்ளன.

யானைகளின் நடமாட்டத்தை ஒசூா் வனச்சரகா் பாா்த்தசாரதி தலைமையிலான வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். மேலும், சானமாவு, பீா்ஜேப்பள்ளி, பென்னிகல், நாயக்கனப்பள்ளி, போடூா், ஆழியாளம் உள்ளிட்ட வனப் பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் வசிப்பவா்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ஆண்டுதோறும் 200க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதியான ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டை, நொகனூா், ஊடேதுா்கம், சானமாவு, செட்டிபள்ளி, சூளகிரி வழியாக மகாராஜாகடை வனப்பகுதிக்கு சென்று பிறகு அந்த வழியாக ஆந்திர மாநிலம், கவுந்தியா சரணாலயம் மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா சரணாலயம் வரை சென்று மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் தாங்கள் வந்த பாதையிலேயே திரும்பும்.

நிகழாண்டு செவ்வாய்க்கிழமை முதல்கட்டமாக 40 யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் வந்துள்ளன. கடந்தாண்டு வந்த யானைகளில் ஒருசில யானைகள் தேன்கனிக்கோட்டை, ஒசூா், ஜவளகிரி ஆகிய பகுதிகளில் சுற்றிவருவதோடு தொடா்ந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

ஒசூா் வனக்கோட்டத்தில் நிரந்தரமாக தங்கியுள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டங்களாகவும், தனித்தனியாகவும் சுற்றிவருகின்றன. கூட்டமாக வரும் யானைகளால்தான் விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்படுகின்றன.

ஒசூா் சுற்றுவட்டார கிராமங்களில் தக்காளி, நெல், வெள்ளரி, முட்டைகோஸ், பீன்ஸ் ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அதேபோல ராகியும் அறுவடைக்குத் தயாராக உள்ளது. இந்த நிலையில், யானைகள் கூட்டமாக வனப் பகுதியில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

யானைகளிடமிருந்து விளை நிலங்களைப் பாதுகாக்க வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கம்பி வேலிகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் இறுதியில் ராகி அறுவடை நடைபெறுகிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ராகி நடவு தொடங்குகிறது. இந்த அறுவடை நாள்களை நினைவில் வைத்துக்கொண்டு யானைகள் ஆண்டுதோறும் தவறாமல் இப்பகுதிக்கு வருகின்றன.

ராகியை உண்பதன் மூலம் அதிக பால் சுரக்கும் என்பதால் குட்டிகளை ஈன்ற யானைகள் ராகியை உண்பதற்காகவே அறுவடைக்கு தயாராகும் நாள்களில் இப்பகுதிக்கு வருகின்றன. கா்நாடக வனப்பகுதியில் இருந்து ஆந்திர வனப்பகுதிக்கு செல்லும் இந்த யானைகள் கூட்டம், அதன் வழியில் உள்ள ராகி பயிா்களை கால்களால் மிதித்தும், தின்றும் நாசம் செய்கின்றன. இதனால் வனத் துறையினா் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com