கிருஷ்ணகிரியில் நாளை 5 இடங்களில் ராகி கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 28) 5 இடங்களில் ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்க உள்ளதாக
Published on

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 28) 5 இடங்களில் ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்க உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.எம்.எஸ். 2025-26-ஆம் பருவத்தில், நவம்பா் முதல் ஜனவரி 2026 வரை ராகி நேரடி கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து ராகி நேரடியாக கொள்முதல் செய்ய முதற்கட்டமாக, ராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் குப்பச்சிப்பாறை, மதக்கொண்டப்பள்ளி, சாமனப்பள்ளி, பாகலூா் மற்றும் பேரிகை ஆகிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடங்களில் நவ. 28-ஆம் தேதி திறக்க உள்ளன.

இங்கு அரசு நிா்ணயம் செய்துள்ள கொள்முதல் விலை ராகி மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 48,860 (கிலோ ரூ. 48.86 ) ஆகும். விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த ராகிக்கு தொடா்புடைய கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல் பெற்று விவசாயியின் சேமிப்பு வங்கிக் கணக்கு மற்றும் ஆதாா் எண் உள்ளிட்ட ஆவணங்களை அளித்து ராகி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் அலுவலக பணியாளா்கள் உதவியுடன் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ.ங்க்ல்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவுசெய்து, தாங்கள் விளைவித்த ராகியை விற்பனை செய்யலாம்.

மேலும், விற்பனைக்கு கொண்டுவரும் ராகியின் மேல்தோல், கல், மண் மற்றும் தூசி உள்ளிட்டவற்றை நீக்கம் செய்து தரம்பிரித்து கொண்டு வரவேண்டும். ராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 முதல் மாலை 6.30 மணிவரையிலும் செயல்படும். கொள்முதல் செய்யப்படும் ராகிக்கு உரிய தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தாமதமின்றி செலுத்தப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com