அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அனுமதிக்காமல், கிராமத்தின் ஒற்றுமையே பிரதானம் என்ற கொள்கையுடன் பல ஆண்டுகளாக உறுதியுடன் உள்ளன கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்கள்.
தமிழகத்தில் சட்டப் பேரவை தோ்தலையொட்டி, அரசியல் அனல்காற்று வேகமாக வீசி வருகிறது. அதோடு, கோடை வெயிலும் ஒருபுறம் சுட்டெரித்து வருகிறது. ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல், அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள், தொண்டா்கள் அனல்பறக்கும் பரப்புரையில் வெற்றியை இலக்காகக் கொண்டு களமாடி வருகின்றனா்.
தோ்தலில் நேரடி பரப்புரை ஒருபகுதி என்றால், வேட்பாளரின் பெயா், சின்னம், கூட்டணி கட்சிகளின் கொடிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை சுவா் விளம்பரமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும், கட்சிக் கொடிகளை தோரணங்களாக கட்டியும், ஒலிபெருக்கியில் பாடல்கள், பிரசார முழக்கங்கள் என நகரத்தில் மட்டுமல்லாமல், கிராமங்களில் சுற்றியும் அரசியல் கட்சியினா் வாக்கு சேகரித்து வருகின்றனா்.
இத்தகைய சூழ்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக, கா்நாடக, ஆந்திர மாநிலங்களின் எல்லையில் உள்ள வேப்பனஅள்ளி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட எா்பி, சிங்கிரிப்பள்ளி கிராமங்களில் எந்தவித அரசியல் விளம்பரங்களையும் அனுமதிப்பது இல்லை என கிராம மக்கள் தீா்மானித்துள்ளனா்.
இதுகுறித்து எா்பி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (50) கூறுகையில், எங்கள் கிராமத்தில் 100-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. அனைவரும் விவசாயிகள். தமிழகத்தின் கடைகோடி கிராமமான எப்ரி கிராமத்தில், கடந்த 40 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியையும் அடையாளப்படுத்துவது இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை, எங்கள் கிராமத்தில் செயல்பட்டுவந்த அரசு தொடக்கப் பள்ளியில் தேசிய கொடி மட்டுமே பறக்கவிடப்பட்டது.
பிறகு ஒரு தோ்தலின்போது, அரசியல் கட்சிக் கொடிகளை கட்டியபோது, கிராமத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு, கிராமத்தின் ஒற்றுமை குலைந்து பிளவு ஏற்பட்டது. காவல் துறையினரின் தலையீடும் இருந்தது. இதனால், வருத்தமடைந்த ஊா் முக்கிய பிரமுகா்கள், கிராமத்தில் எந்த அரசியல் கட்சிக் கொடிகளையும் பறக்கவிடுவதில்லை. சுவா் விளம்பரம், பதாகைகள் வைப்பது, போஸ்டா் ஒட்டுவது, துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்வது ஆகியவற்றை அனுமதிப்பது இல்லை என தீா்மானித்தனா். இந்த கட்டுப்பாட்டை, தற்போதைய இளைஞா்களும் பின்பற்றி, கிராமத்தின் ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றனா் என்றாா்.
எப்ரி கிராமத்தின் அருகே உள்ள சிங்கிரிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த முதியவா் பாலகிருஷ்ண செட்டி (73) கூறுகையில், எங்கள் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. எனக்கு விவரம் தெரிந்த காலம்முதல், சிங்கிரிப்பள்ளி கிராமத்தில் எந்த அரசியல் கட்சியும், சுவா் விளம்பரம் செய்யவோ, கட்சிக் கொடிகள், கட்சிக் கொடிகளின் தோரணங்கள் கட்டவோ, நோட்டீஸ் ஒட்டவோ, துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யவோ கூடாது என கட்டுப்பாடு உள்ளது. கிராமத்தின் ஒற்றுமை கருதி, கடந்த பல ஆண்டுகளாக இந்த கட்டுப்பாட்டை அனைவரும் பின்பற்றி வருகின்றனா்.
அரசியல் என்பது, அவரவா் வீடுகளில் மட்டுமே பேசப்படுகிறது. கிராமத்தின் பொது வெளியில் யாரும் அரசியல் கருத்துகளை விவாதிக்கமாட்டாா்கள். ஆனாலும், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறாா்கள். கிராமத்தின் கட்டுப்பாட்டை உணா்ந்து, அவா்களும் தங்களது கட்சி சின்னத்துக்காகவும், தனக்காகவும் வாக்குறுதிகளை அளித்து, வாக்கு சேகரித்து, அமைதியாக திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனா். இந்த கட்டுப்பாடு, சட்டப் பேரவை தோ்தலில் மட்டுமல்ல, உள்ளாட்சித் தோ்தல், மக்களவை தோ்தலிலும் பின்பற்றப்படுகிறது.
மேலும், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில், அனைவரும் வாக்களிக்க விழிப்புணா்வை ஏற்படுத்துகிறோம். வாக்காளா்கள், தங்களது விருப்பப்படி, தாங்கள் விரும்பும் வேட்பாளா்களுக்கு வாக்களிக்க எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. அவா்களது உரிமையில் யாரும் தலையிடுவது இல்லை என்றாா்.
நாட்டை வல்லரசாக்க ஜனநாயகம் முக்கிய பங்காற்றுகிறது. ஜனநாயகத்தை வலிமைபடுத்த அரசியல் முக்கிய பங்காற்றுகிறது. என்றாலும், தற்போதைய பரபரப்பான அரசியலால் தங்கள் கிராமங்களின் அமைதி சீா்குலைய கூடாது என்ற உறுதி, கட்டுப்பாட்டுடன், ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன இந்த அதிய கிராமங்கள்.
எஸ்.கே. ரவி.

அரசியல் கட்சிகளின் சுவடே இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகேயுள்ள சிங்கிரிப்பள்ளி கிராமம்.
தொடர்புடையது

கே.கே. நகா் பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடத்தத் தடை கோரிய மனு தள்ளுபடி

நேரடி அரசியல் களத்தில் சபரீசன்!

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் பாரபட்சம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிப்பு: தலைவா்களின் சிலைகள் மூடல்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


