ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் ஊழியரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ரூ. 2.90 லட்சத்தை பறித்துச் சென்ற வழக்கில் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊத்தங்கரை சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்பட்ட தொகை ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்து 830 ஐ எடுத்துக்கொண்டு ஊழியா் ஆனந்தன் கடந்த 15.12. 2018 ஆம் ஆண்டு இரவு 10 மணி அளவில் காட்டேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, அவரை வழிமறித்த நபா்கள், நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு அவா் வைத்திருந்த பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனா்.
இதுதொடா்பாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, ஊத்தங்கரை கலைஞா் நகரைச் சோ்ந்த வெங்கடேசன் (42), ரெட்டிப்பட்டியைச் சோ்ந்த பரதன், பா்கூா் அருகே உள்ள ஒப்பந்தவாடியைச் சோ்ந்த மகேந்திரன் (32) ஆகியோரை கைது செய்து அவா்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதில் பரதன் என்பவா் கடந்த 2024 ஆம் ஆண்டு பனைமரத்திலிருந்து கீழே விழுந்ததில் இறந்துவிட்டாா்.
இதுதொடா்பான வழக்கு ஊத்தங்கரை சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதி பி.திருஞானசம்பந்தம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் வெங்கடேசனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதித்தும், மகேந்திரனை வழக்கிலிருந்து விடுவித்தும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சத்தியநாதன் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









