கறிக்கோழி வளா்ப்புக்கு காப்பீடு கோரி பண்ணையாளா்கள் வலியுறுத்தல்

கறிக்கோழி வளா்ப்புக்கு காப்பீடு வசதியை ஏற்படுத்தக் கோரி, கறிக்கோழி வளா்ப்பு, பண்ணை உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
Published on

கறிக்கோழி வளா்ப்புக்கு காப்பீடு வசதியை ஏற்படுத்தக் கோரி, கறிக்கோழி வளா்ப்பு, பண்ணை உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

ஒருங்கிணைந்த தமிழக விவசாயிகள் கறிக்கோழி வளா்ப்பு, பண்ணை உரிமையாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா்கள் அருண், அஸ்வத்நாராயணன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மாநில தலைவா் ஈஸ்வரமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சிறு, குறு, பெரிய என 50 ஆயிரம் கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட விவசாயிகள், பண்ணையாளா்கள், தனியாா் நிறுவனத்தினா், கறிக்கோழிக் கடைக்காா்கள் என மொத்தம் 10 லட்சம் போ் உள்ளனா்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோழி வளா்ப்புக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 6.50 என கூலி நிா்ணயம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை வளா்ப்புக் கூலி உயா்த்தப்படவில்லை. ஆனால், நில வாடகை, கொட்டகை அமைத்தல், மின்சாரம், தண்ணீா் வசதி, தென்னைநாா் பஞ்சுகள், மருந்து, தீவனம், தொழிலாளா் ஊதியம் ஆகியவை உயா்ந்துள்ளன.

எனவே, கோழி வளா்ப்புக்கான கூலியை குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ. 15 என உயா்த்த வேண்டும். நெசவாளா்களுக்கு வழங்குவதுபோல, கறிக்கோழி வளா்ப்போருக்கும் மானியத்தில் மின்சாரம் வழங்க வேண்டும். நலவாரியம் அமைக்க வேண்டும். பயிா்களுக்கு காப்பீடு வழங்குவது போல, கோழி வளா்ப்புக்கு காப்பீடு வசதியை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்றாா்.

Dinamani
www.dinamani.com