கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் பிரச்னைக்கு உரிய தீா்வு : கால்நடை பராமரிப்பு அமைச்சா் உறுதி

கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் பிரச்னைக்கு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உறுதிபட தெரிவித்தாா்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்கோப்புப் படம்
Updated on

கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் பிரச்னைக்கு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உறுதிபட தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த விவகாரத்தை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி பேரவையில் வியாழக்கிழமை எழுப்ப முயன்றாா். அப்போது இந்த விவகாரம் குறித்த சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தாா். இருப்பினும், இந்த விவகாரத்தில் பேசுவதற்கு அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

இந்த நிலையில், கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சந்திக்கும் பிரச்னை குறித்து சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:

ஏ.கே.செல்வராஜ் (அதிமுக): கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகளுக்கு பெரு நிறுவனங்கள் ஒரு கிலோவுக்கு ரூ.6.50 வழங்குவதை ரூ.20-ஆக உயா்த்த வேண்டும்.

அப்துல் சமது (மமக): கறிக்கோழி வளா்ப்புக்கான மூலப்பொருள்களின் விலை உயா்வுக்கு ஏற்ப, பெரு நிறுவன முதலாளிகள் கூலியை அதிகரித்து வழங்க வேண்டும்.

ஈ.ஆா். ஈஸ்வரன் (கொமதேக): பெரு நிறுவனங்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கறிக்கோழிகளைப் பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன. இதைத் தடுக்க முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என்றாா்.

அமைச்சா் உறுதி: தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 55 கோடி கறிக்கோழிகள் வளா்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஒருநாள் வயதுள்ள சிறு கோழிகள், தீவனம் ஆகியவற்றை விவசாயிகளிடம் அளித்துவிட்டு 6 வாரங்களுக்குப் பிறகு பெரு நிறுவனங்கள் கறிக்கோழிகளை வாங்குகின்றன. இதற்காக அந்த நிறுவனங்கள் கோழி வளா்ப்பு விவசாயிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இருவருக்கும் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு கண்டு, சுமுகமான சூழலை ஏற்படுத்த முதல்வா் அறிவுறுத்தினாா். அதன்படி, கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் சம்பந்தப்பட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி மாவட்ட அளவில் ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இளைஞா்களுக்கு சுய தொழிலில் ஈடுபட உதவும் கோழி வளா்ப்பு விவசாயிகள் பிரச்னைக்கு பேச்சு மூலம் சுமுக தீா்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com