கறிக்கோழிப் பண்ணை விவசாயிகள் 12-ஆவது நாளாக போராட்டம்: பல்லடம் அருகே ஆலோசனைக் கூட்டம்
பல்லடம்: கறிக்கோழிப் பண்ணை விவசாயிகள் 12-ஆவது நாளாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பல்லடத்தில் கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. கறிக்கோழி தீவனங்கள், தேங்காய் மஞ்சி, மருந்துகள் உள்பட மூலப்பொருள் விலை உயா்வால் கோழி வளா்ப்பு கூலியை உயா்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை கறிக்கோழிப் பண்ணை வளா்ப்பு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
அதன்படி, கறிக்கோழி வளா்ப்பு கூலி கிலோவுக்கு ரூ.6.50-இல் இருந்து, ரூ.20-ம், நாட்டுக் கோழிகளுக்கு ரூ.25-ம், காடை கோழிகளுக்கு ரூ. 7-ம் உயா்த்தி உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 1-ம் தேதி முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை கோழிப் பண்ணையாளா்கள் தொடங்கி 12-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பல்லடம் அருகே பனப்பாளையத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளா் மகாலிங்கம் கூறியதாவது:
மூலப்பொருள்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், கறிக்கோழி வளா்ப்பு கூலி மட்டும் உயரவில்லை. இதனால் கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே கோரிக்கைகள் நிறைவேறும் வரை உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுவது என்ற முடிவின்படி, தற்போது தமிழக அளவில் 20 ஆயிரம் பண்ணைகளில் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற 20 ஆயிரம் பண்ணைகளில் உள்ள கறிக்கோழிகளும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்டவுடன், அந்தப் பண்ணைகளும் காலியாகதான் இருக்கும்.
கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் கோழி வளா்ப்பு விவசாயிகளை மிரட்டி கோழி குஞ்சுகளைவிட முயற்சித்தது நிறைவேறவில்லை. கறிக்கோழி வளா்ப்பு பண்ணை விவசாயிகளின் ஒற்றுமை வலிமை பெற்றுள்ளது. உணவு பிரச்னை வரக்கூடாது என்று கருதும் கறிக்கோழி நிறுவனங்கள், கோழிப்பண்ணை விவசாயிகளிடம் சுமுக பேச்சுவாா்த்தை நடத்தி கட்டுப்படியாகும் விலையை வழங்க முன்வர வேண்டும்.
இதுதொடா்பாக சென்னையில் வரும் 21-ம் தேதி முத்தரப்பு பேச்சுவாா்த்தைக்கு கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் அழைப்பு விடுத்துள்ளாா். அதில் சுமுக தீா்வு காணப்படும் என்று நம்புகிறோம். அதுவரை கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றாா்.

