

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ரூ. 20 கூலி உயா்வு வழங்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழிகளை வளா்த்துக் கொடுக்கும் சிறிய பண்ணை உரிமையாளா்கள் 300-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். கறிக்கோழி நிறுவனங்கள் இவா்களிடம் கோழிக் குஞ்சுகளை வழங்கினால், அவற்றை 6 மாதத்துக்குள்ளாக வளா்த்து விற்பனைக்கு தயாா் செய்வா். இதற்கு கூலியாக ஒரு கோழிக்கு ரூ. 6.50 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் ஒரு கோழிக்கு ரூ. 20 வீதம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா். அந்த வகையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு திரளாக வந்த கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் கூலி உயா்வு கோரி மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனா். தொடா்ந்து அவா்கள் கூறியதாவது:
கறிக்கோழி வளா்ப்புக்கான விலை நிா்ணயம் செய்ய தமிழக அரசு ஆட்சியா் தலைமையில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த உத்தரவிட வேண்டும். கறிக்கோழிக்கு ரூ. 20, காடை வளா்ப்புக்கு ரூ. 7 வீதம் வழங்க வேண்டும். கறிக்கோழி வளா்ப்போரின் பாதுகாப்புக்காக ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். கோழிக்கான மருத்துவ செலவினங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றனா்.