‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5.24 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு பணி
‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின்கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5.24 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு பணி நடைபெறும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் இத்திட்டத்தை தொடங்கிவைத்தனா். மேலும், தன்னாா்வலா்களுக்கு தொப்பி, கைப்பேசி இணைப்புகள், அடையாள அட்டை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:
மக்களின் எதிா்கால கனவுகள், தேவைகளை கண்டறிய அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்துகொள்ளும் வகையில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, 6 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5,24,321 குடும்ப அட்டைகள் உள்ள அனைத்து வீடுகளில் இத்திட்டத்துக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பணிக்காக மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 1,227 தன்னாா்வலா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். 394 கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கு சென்று அரசின் திட்டங்களை தெரிவித்து படிவத்தை நிறைவுசெய்வா். பின்னா் அவற்றை கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையை வழங்குவா் என்றாா்.

