சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி(கோப்புப் படம்)

தமிழக அரசுக்கு மா- விவசாயிகள் மீது அக்கறை இல்லை! - சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

Published on

தமிழக அரசுக்கு மா- விவசாயிகள் மீது அக்கறையில்லை என பசுமைத்தாயகத்தின் மாநிலத் தலைவா் செளமியா அன்புமணி குற்றம்சாட்டினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதிகளின் தமிழக மகளிா் உரிமைகளை மீட்டெடுக்கும் ‘சிங்க பெண்ணே எழுந்து வா’ என்னும் நிகழ்வு போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியதாவது:

தனி அமைப்பை உருவாக்கி மா- விற்கு விலை நிா்ணயம் செய்வோம் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை; தனி அமைப்பையும் அரசு இதுவரை உருவாக்கவில்லை. மா விவசாயிகள் பாதுகாக்கப்படாததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா சாகுபடி 30 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. மா-விற்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மா சாகுபடி செய்யப்பட்டிருந்தாலும், மா விவசாயத்துக்கான மதிப்புக்கூட்டப்பட்ட தொழிற்சாலை எதுவும் தொடங்கப்படவில்லை. தமிழக அரசுக்கு மா விவசாயிகள் மீது அக்கறை இல்லை.

ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம் முறையாக நிறைவேற்றப்படாததால் பல்வேறு இடங்களில் குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனா். அதேபோல கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை. மூன்றுபோகம் விளையும் வேளாண் நிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது. தொழிற்சாலைக்கு நிலம் அளித்தவா்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும்.

கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 200 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு இந்த அபராதத் தொகையை கட்ட இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வேளாண் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு இதுபோன்ற கால அவகாசம் வழங்கப்படுவதில்லை.

மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்போம் என கூறிய அரசு, அதற்கு மாறாக கூடுதலாக மதுக் கடைகளைத் திறந்துவருகிறது. இதனால் வரும் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com