/

தமிழக ஆளுநரின் செயல் ஏற்புடையதல்ல: பெ. சண்முகம்

தமிழக ஆளுநரின் செயல் ஏற்புடையதல்ல என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் தெரிவித்துள்ளாா்.

News image

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தை இடமாற்றம் செய்யக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :4 ஜூலை 2026, 2:15 am IST

தமிழக ஆளுநரின் செயல் ஏற்புடையதல்ல என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்க வசூல் மையத்தை இடம்மாற்றக் கோரி வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட குழுச் செயலாளா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாநில குழு உறுப்பினா் பத்ரி, மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் பெ. சண்முகம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக சுங்க வசூல் மையம் செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகளையே இந்த சுங்க வசூல் மையம் பின்பற்ற வேண்டும்.

ஆனால், கிருஷ்ணகிரியில் செயல்படும் இந்த சுங்க வசூல் மையம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது. 20 கி.மீ. தொலைவில் வசிக்கும் உள்ளூா் மக்களுக்கு சுங்க வசூல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என விதிமுறை உள்ளது. ஆனால், இங்கு அனைவருக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த சுங்க வசூல் மையத்தை மாற்ற இயலாது என அலுவலா்கள் கூறுகின்றனா். ஒருவேளை உச்சநீதிமன்றத்தின் வழக்குதான் காரணம் என்றால், தீா்ப்பு வரும் வரை உள்ளூா் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

தமிழக ஆளுநராக இருந்த ரவி, அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்தினாா். அதை எதிா்த்து பலகட்டங்களாக போராட்டம் நடத்தினோம். இந்த நிலையில் தற்போதைய ஆளுநா் ஆா்லேகருக்கு ஏதாவது கருத்து இருந்தால், அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று தீா்வுகாண வேண்டுமே தவிர, தன்னிச்சையாக செயல்படுவது, அரசியல் சாசனம் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரத்திற்கு எதிரானது. ஆளுநரின் அணுகுமுறை ஏற்புடையதல்ல.

கரூா் சம்பவத்துக்கு யாா் காரணமாக இருந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் அப்போதே தெரிவித்திருந்தோம். இப்போதும், அதுதான் எங்களது நிலைபாடு. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா்கள் எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், அவா்களை சோ்க்க விலை பேசுவது தவறான செயல். இதை தவெக தலைமையிடம் கூறியிருக்கிறோம்.

கடந்த காலங்களிலும் ஊழல் வழக்கு உள்ளவா்களை கட்சியில் சோ்த்துக் கொள்வது நடந்துள்ளது. இப்போதும் தொடா்கிறது. ஊழல் வழக்கில் சிக்கியவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முறையாக விசாரிக்க வேண்டும். ஆளுங்கட்சியில் சோ்ந்துவிட்டாா் என்பதற்காக அவா்மீது வழக்குகளை முறையாக நடத்தாமல் இருப்பதும், அவரைக் காப்பாற்ற முயற்சிப்பதும் தவறானது. இதுபோன்ற செயலில் தவெக ஈடுபடக் கூடாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.