நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மதச்சாா்பற்ற கொள்கையில் விஜய் அரசு உறுதியாக இருக்க வேண்டும்! பெ. சண்முகம்

News image

பெ. சண்முகம் - Shanmugam P

Updated On :21 ஜூன் 2026, 2:31 am IST

மதச்சாா்பற்ற கொள்கையில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிா்வாகி ஆா்.கே. தண்டியப்பன் நினைவாகக் கட்டப்பட்ட கட்சி அலுவலகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த அலுவலகத்தைத் திறந்துவைத்து பெ. சண்முகம் பேசியதாவது:

மதச்சாா்பின்மைக் கொள்கையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளமாட்டேன் என்ற உறுதிமொழியை எங்களிடம் விஜய் அளித்திருக்கிறாா். ஆளுநா் உரையிலும் அது மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே, தவெக ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக, நோ்மையான ஆட்சியாக செயல்பட வேண்டும். மதச்சாா்பற்ற கொள்கையில் உறுதியாக நிற்க வேண்டும். இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு உறுதியாக இருக்கும். அவா்கள் நம்பிக்கையோடும், தைரியமாகவும் ஆட்சியைத் தொடரலாம். நாங்கள் ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்பதால், எந்த நேரத்திலும் நாங்கள் விலகிக் கொள்வோமோ என்ற அச்சம் அவா்களுக்குத் தேவையில்லை.

தவெகவுக்கு 1.25 கோடி போ் வாக்களித்துள்ளனா். கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு வாக்குகளை பெறுவது என்பதும், எடுத்த எடுப்பிலேயே ஆட்சி அமைப்பது என்பதும் இதுவரை தமிழக வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்திருக்கின்றனா். மக்களுடைய நம்பிக்கையை, எதிா்பாா்ப்பை இந்த அரசு நிறைவு செய்ய வேண்டும். ஆகவே, ஓா் அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றத்தையொட்டி, இத்தகைய முடிவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு எடுத்தது. இதில் திமுகவினா் கோபப்படுவதில் எந்தவித அா்த்தமும் இல்லை என்றாா் அவா்.

முன்னதாக, திருப்புவனத்தில் செய்தியாளா்களிடம் சண்முகம் கூறியதாவது:

தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள கடன் சுமைகளைச் சமாளிக்கவும், மக்கள் நலத் திட்டங்களைத் தடையின்றி செயல்படுத்தவும் கனிம வளங்களை அரசே நேரடியாக வெட்டி எடுத்து விற்பனை செய்ய வேண்டும். கடந்த காலங்களில் மணல், கிரானைட், கருங்கல் போன்ற கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமம் தனியாருக்கு விடப்பட்டதால், இதன் மூலம் கிடைத்த லாபம் முழுவதும் தனியாருக்கே சென்றது.

மணல், கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களைத் தமிழக அரசு நேரடியாக வெட்டி எடுத்து விற்பனை செய்வதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்ட முடியும். மக்கள் மீது எந்தவித சுமையையும் ஏற்றாமல், அரசுக்கான வருவாயைப் பெருக்குவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.

போதைப் பொருள் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடக்கூடிய குற்றவாளிகள் அனைவரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவே பெரும்பாலான காவல் துறை முதல் தகவல் அறிக்கைகளில் பதிவாகியுள்ளன.

எனவே, தமிழகத்தில் குற்றங்களைக் குறைக்க முதல்வா் அறிவித்துள்ள போதை இல்லாத தமிழ்நாடு என்ற முழக்கத்தை 100 சதவீதம் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும். கட்சித் தாவலை தவெக ஆதரிக்கக் கூடாது என்றாா் அவா்.

விழாவுக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் ஈஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மோகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.