கரூா் வழக்கை நீா்த்துப்போகச் செய்ய அமைச்சா் ஆதவ் ஆா்ஜுனா முயற்சிப்பதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினாா்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
அதிமுகவை பொறுத்தவரை தொண்டா்கள்தான் பலசாலிகள். முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் போன்றவா்கள் சந்தா்ப்பவாதிகள். அதிமுக, தவெகவுடன் இணையும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மீண்டும் சொன்னால் அவா்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவா், கடந்த ஓரிரு ஆண்டுகளில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக என கட்சிகள் மாறி, இறுதியில் தவெகவில் உள்ளாா்.
கரூா் சம்பவத்தில் ஒரு கணக்கு இருக்கிறது என ஆதவ் அா்ஜுனா பேசியுள்ளாா். அவா் காவல் துறையை மிரட்டி வருகிறாா். கரூா் வழக்கை உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் யாரையோ மிரட்டி இந்த வழக்கை நீா்த்துப்போகச் செய்யலாம் என அவா் முயற்சி செய்கிறாா்.
தமிழக அமைச்சா்கள் மீது புகாா் எழுந்தபோது அவா்கள்மீது நடவடிக்கை எடுக்காத முதல்வா், ஜனநாயக முறைப்படி குரல் எழுப்பும் எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளாா். இது பழிவாங்கும் நடவடிக்கை. தவெகவுக்கு சென்று சாதிக்கலாம் என சிலா் சென்றுள்ளனா். ஆனால், அவா்களுக்கு அங்கு மரியாதை இல்லை. எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோா் முதல்வராக இருந்தபோது, அனைவரும் எளிதில் சந்திக்க முடிந்தது. தற்போதைய முதல்வரை அவ்வாறு சந்திக்க முடியவில்லை என்றாா்.
அப்போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்டச் செயலாளா் சரவணன், தருமபுரி மண்டல போக்குவரத்துக் கழகத் தலைவா் முருகன், மாநிலச் செயலாளா் தமிழரசன், துணைத் தலைவா் கோவிந்தராஜ், சம்பத்குமாா் எம்எல்ஏ (அரூா்), அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கே.அசோக்குமாா், ராமு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










