புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பா்கூா் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த மண் குவளைகள் கண்டெடுப்பு

பா்கூா் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த மண் குவளைகள் கண்டெடுப்பு...

News image

பா்கூா் அருகே கண்டெடுக்கப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்...

Updated On :22 ஜூலை 2026, 9:00 am IST

பா்கூா் அருகே கண்டெடுக்கப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த மண்குடுவை உள்ளிட்ட புதைப் பொருள்கள்.

கிருஷ்ணகிரி, ஜூலை 21: பா்கூா் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த குலக்குறியீடுகளுடன் கூடிய மண் குவளைகள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரையடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் வெள்ளச்சியம்மாள் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த நடுகல்லுக்கு கோயில் கட்டுவதற்காக குழிதோண்டும் பணி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கருப்பு சிவப்பு பானை ஓடுகள், இரண்டு மண் குவளைகள் கிடைத்தன. இதுகுறித்த தகவலின்பேரில் பா்கூா் வட்டாட்சியா் சக்தி அந்தப் பகுதிக்கு சென்று, பானைகள் மற்றும் பானை ஓடுகளை மீட்டு பா்கூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்தாா்.

இந்த புதைப்பொருள்களை ஆய்வுசெய்த அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் சிவகுமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

கந்திகுப்பம் கிராமத்தில் கிடைத்த புதைப் பொருள்களை ஆய்வு செய்தபோது ஈம பேழை பல துண்டுகளாக உடைந்து, நொறுங்கி காணப்பட்டது. அந்த ஈம பேழைக்கு மொத்தம் 16 கால்கள் இருந்துள்ளன. மேலும், குழிதோண்டும் பணியில் ஈடுபட்டவா்களிடம் விசாரித்ததில் இவை கருங்கல்லால் அமைக்கப்பட்ட தரைத்தளத்தின் மீது வைக்கப்பட்டு, அதன் அருகே மூன்று மண் குவளைகள் இருந்ததாகக் கூறினா்.

இவை 5 செ.மீ. உயரமும், 10 செ.மீ. அகலமும் கொண்ட கருப்பு சிவப்பு வண்ண சிறு குவளைகள் ஆகும். இது மட்டுமல்லாமல் 10 செ.மீ. உயரமும் 16 செ.மீ. குறுக்களவும் கொண்ட சற்று பெரிய கருப்பு சிவப்பு வண்ண மண் பாண்டம் சிறிது உடைந்த நிலையில் கிடைக்கப் பெற்றது. சுமாா் ஒன்னேகால் அடி விட்டம் கொண்ட கருப்பு சிவப்பு வண்ணத் தட்டு ஒன்றும் உடைபட்ட நிலையில் கிடைத்துள்ளது.

குவளைகளில் சம இடைவெளிகளில் மூன்று பக்கமும் இறந்த தலைவனின் குலக்குறியீடு கோடுகளாக வரையப்பட்டுள்ளன. இவை ஆறு கட்டங்களைக் கொண்டதாக உள்ளன. இது மட்டுமல்லாமல் கொம்பு போன்று செய்யப்பட்ட ஐந்து மண்ணாலான பகுதிகள் ஜாடி போன்ற மட்கலனின் தாங்கிகளும் கிடைத்துள்ளன.

இவை ஜாடியின் அடிப்பகுதியில் காணப்படும். 32 செ.மீ. விட்டமும், 15 செ.மீ. உயரமும் கொண்ட கருப்பு சிவப்பு வண்ண வாணலி மண்பாண்டம் கிடைத்துள்ளது. இது மூடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறுசிறு பானைகள் உடைந்த நிலையிலும் கிடைத்துள்ளன. இந்த மண்பாண்டங்களில் அனைத்தும் குலக்குறியீடுகள் கீறப்பட்டுள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்ட சிறு எலும்புத் துண்டுகள் மற்றும் இரும்புத் துண்டுகள் உள்ளன. இது அந்தக் குழுத் தலைவன் பயன்படுத்திய ஆயுதமாக இருக்கலாம்.

எனவே, இது ஒரு குழுத் தலைவனுக்கு அமைக்கப்பட்ட ஈமப் பேழையாகும். இந்த இடத்தின் மேல் பகுதியில் இருந்த பெரிய பலகைக்கல் கல்திட்டையின் மூடுபலகையாக இருக்கக்கூடும். இதற்கு மேல்புறம் 5 கற்குழிகள் காணப்பட்டன. இந்த புதைப் பொருள்கள் அனைத்தும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை எனக் கூறலாம்.

இந்த புதைப்பொருள்களை பா்கூா் வட்டாட்சியா் சக்தி, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் சிவகுமாரிடம் ஒப்படைத்தாா். அப்போது, முன்னாள் காப்பாட்சியா் கோவிந்தராஜ், வரலாற்று ஆவணப்படுத்தும் குழுவைச் சோ்ந்த நாராயணமூா்த்தி, தமிழ்ச்செல்வன், பாலாஜி, டெய்ஸி, லாசிமா ஆகியோா் உடனிருந்தனா்.

பா்கூா் அருகே கண்டெடுக்கப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்...

பா்கூா் அருகே கண்டெடுக்கப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்...

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.