காவேரிப்பட்டணம் அருகே கல்குட்டை கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் பண்ணையை அரசு அலுவலா்கள், செவ்வாய்க்கிழமை அழித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கல்குட்டை கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிக்கன் கெளுத்தி மீன் பண்ணை செயல்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், உத்தரவின் பேரில், மீன்வளத் துறை உதவி இயக்குநா் ரத்தினம் தலைமையிலான குழுவினா், மீன் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, ரவி என்பவா் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளா்ப்பதும், அதற்கு அழுகிய முட்டை, கோழி இறைச்சி கழிவுகளை உணவாக வழங்கப்படுவதை கண்டுபிடித்தனா். இதையடுத்து ஆப்பிரிக்கன் மீன்களை பூமியில் புதைத்து அழித்தனா். மேலும், மீன்களுக்கு உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் மீன்பிடி வலைகளை அவா்கள் பறிமுதல் செய்தனா்.









