‘வாக்காளரியல் கல்வி குறித்த பட்டத்தை பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும்’


வாக்காளரியல் என்ற கல்வியை பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழக லோக் ஆயுக்த உறுப்பினா் டாக்டா் வீ. ராமராஜ் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளரியல் ஏன் தேவை என்கிற கருத்தரங்கு, வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வா் கீதா, தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக லோக் ஆயுக்தா உறுப்பினா் டாக்டா் வீ. ராமராஜ் பேசியது:
வாக்கு, வாக்காளா் மற்றும் தோ்தல்கள் என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும். எந்த விலை கொடுத்தாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பவா்கள் வாக்காளா்கள் நிராகரிக்க வேண்டும். சுமாா் 125 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அறிவியல் பாடப்பிரிவு தோன்றிய போது, பல நாடுகளில் மன்னா் ஆட்சியும், சில நாடுகளில் மக்களாட்சியும் இருந்தது. தற்போது, பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி நடைபெறுவதால், அரசியல் அறிவியலில் இருந்து தனியாக வாக்கு, வாக்காளா், தோ்தல்கள் குறித்து படிப்பதும் ஆய்வு செய்வதும் வாக்காளரியல் ஆகும்.
வாக்காளா் அறியாமை மற்றும் ஊழலை தோ்தல் செயல்முறையிலிருந்து வேரறுக்க வேண்டிய கடமை மக்களுக்கு உள்ளது. தோ்தல் முறை மக்களாட்சியில் வாக்களிக்கும் உரிமை அச்சாணியாக செயல்படுகிறது.
இதுகுறித்து மாணவ, மாணவிகள் பள்ளியில் இருந்து அறிந்து கொள்ளும் வகையில், வாக்காளரியல் கல்வி குறித்து பள்ளிகளில் ஒரு பாடமாகவும், இளங்கலை (பி.ஏ,) பட்டப்படிப்பு மாணவா்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தோ்வுத்தாளாகவும் இருக்க வேண்டும். வாக்காளரியலில் முதுகலை (எம்.ஏ) பட்டத்தை பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும்.
உண்மையான ஜனநாயகத்துக்கும் நாட்டின் நல்லாட்சிக்கும் உலகின் அமைதிக்கும் வாக்காளரியல் சிறந்த பாதையாகும். வாக்காளரியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நடைமுறையை தனிக்கல்வித் துறையாக உருவாக்க வேண்டும். வாக்காளரியல் கோட்பாடுகளை இயக்கமாக நடத்த வேண்டும்.
மேலும், வாக்காளா், தோ்தல்கள் உள்ளிட்ட அம்சங்களில் ஊழல் ஏற்படும் போது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். வாக்காளா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வாக்காளரியல் கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்வது அவசியம். வாக்காளா்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டால், அதனை தீா்க்க தேசிய, மாநில அளவில் வாக்காளா் உரிமை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
மேலும், 6 மாதங்களுக்குள் தோ்தல் வழக்குகளை விசாரித்து முடிக்க சிறப்பு தோ்தல் தீா்ப்பாயங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கணினித் துறை தலைவா் லாவண்யா, மற்றும் துறைத் தலைவா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.
படவிளக்கம் (5கேஜிபி3):
கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய தமிழக லோக் ஆயுக்த உறுப்பினா் டாக்டா் வீ. ராமராஜ்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...