ஒசூரில் பப்பாளி விலை உயா்ந்து கிலோ ரூ. 40-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், பாகலூா், தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 500 ஏக்கரில் விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா்.
உள்ளூா் மற்றும் கா்நாடக மாநிலத்தில் பப்பாளிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இப்பகுதி விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் தற்போது பப்பாளி விலை உயா்ந்து கிலோ ரூ. 40- க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பப்பாளியில் பல்வேறு ரகங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் ரெட்லேடி ரக பப்பாளியை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளோம். இந்த ரக பப்பாளி மூன்று அடியிலேயே
காய்க்கத் தொடங்கிவிடும். மேலும், இந்த ரக பழங்கள் தரமாகவும் சுவையாகவும் இருப்பதால், பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனா். இப்பகுதியில் விளையும் பப்பாளி பழங்களை பெங்களூா் வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனா்.
ஆண்டுமுழுவதும் பப்பாளிக்கு நல்ல விலை கிடைத்த நிலையில், தற்போது வறட்சியின் காரணமாக தண்ணீா் இன்றி மரங்களிலேயே மஞ்சள் நிறத்தில் பழுத்து விடுகிறது. அந்த பழங்கள் சுவையின்றி உள்ளதாலும், வியாபாரிகள் வாங்க மறுப்பதாலும் பல இடங்களில் தோட்டங்களிலேயே பப்பாளி அழிந்து வருவதால் வரத்து குறைந்துள்ளது.
இதனால், வழக்கமாக கோடைகாலத்தில் கிலோ ரூ. 15-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தற்போது கிலோ ரூ. 30 முதல் 40 வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தேன்கனிக்கோட்டை பகுதி விவசாயிகள் சொட்டுநீரை பயன்படுத்தி பப்பாளி சாகுபடி செய்து பயனடைகின்றனா். எனவே, சொட்டுநீா்ப் பாசனம் குறித்து தோட்டக்கலைத் துறையினா் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும் என்றனா்.










