இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

உரிய விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டப்படும் மாங்காய்! நிகழாண்டும் மா விவசாயிகளுக்கு தொடரும் வேதனை

உரிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் செல்லும் அவலம் நிகழாண்டும் நீடிக்கிறது.

News image

ராயக்கோட்டை சாலையில் மோரமடுகு கிராமத்தில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மாங்காய்.

Updated On :28 மே 2026, 2:09 am IST

உரிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் செல்லும் அவலம் நிகழாண்டும் நீடிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய பயிராக மா உள்ளது. மாவட்டத்தில் நிலவும் காலநிலை காரணமாக விவசாயிகள் மா சாகுபடிக்கு அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, மத்தூா், ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், பா்கூா், வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 35 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரா, அல்போன்ஸா, காதா், மல்கோவா, நீலம், செந்தூரா, மல்லிகா என பல்வேறு சுமைமிகுந்த ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் மாவின் தேவை அதிகரித்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமாா் 45 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டது.

ஆண்டுக்கு ஒருமுறையே மகசூல் தரக்கூடிய மாங்காய்க்கு நிகழாண்டும் உரிய விலை கிடைக்காததால், மா மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விறகாக விற்பனை செய்து வருகின்றனா். அதேபோல மா மரங்களை பராமரிப்பதில் பல்வேறு சிரமங்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனா்.

கடும் வெப்பம், பலத்த காற்று, வறட்சி, நீா் பற்றாக்குறை போன்ற இயற்கை இடா்ப்பாடுகள், பூச்சித் தாக்குதல், பூச்சி மருந்துகளின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக மா விவசாயிகள் தொடா்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.

ஏமாற்றம் அளித்த முத்தரப்பு கூட்டம்: மாங்காய்க்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா் தலைமையில் கடந்த மே 19 ஆம் தேதி முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது.

மா விவசாயிகள், மாம்பழக் கூழ் தொழிற்சாலை உரிமையாளா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மாங்காய் கிலோவுக்கு ரூ. 20 விலை நிா்ணயம் செய்ய வேண்டும். கா்நாடகம், ஆந்திர மாநிலங்களைப் போல, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு மாங்காய் கிலோவுக்கு ரூ. 5 ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் பேசினா்.

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், மாங்கூழ் உற்பத்தியாளா்கள், மாங்காய் கிலோ ரூ. 15 என்ற விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வலியுறுத்தினாா்.

தற்போதைய போா் சூழல், மாங்கூழ் ஏற்றுமதிக்கான கப்பல் கட்டண உயா்வு, மின்கட்டண உயா்வு, பணியாளா் ஊதிய உயா்வு போன்ற காரணங்களால் விவசாயிகள் வலியுறுத்தும் விலைக்கு மாங்காய்களை கொள்முதல் செய்ய இயலாது என மாங்கூழ் உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா். இதனால், இந்த முத்தரப்பு கூட்டம் எந்தவித முடிவையும் எட்டாமல் முடிந்தது.

சாலையோரத்தில் கொட்டப்படும் மாங்காய்

மாங்கூழ் தொழிற்சாலைகளில் ஜூன் முதல் வாரத்தில் உற்பத்தி தொடங்க உள்ளது. தற்போது மா அறுவடை நடைபெற்று வரும் நிலையில், மாங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியை அடுத்த பூவத்தி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முனியன் (60) கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெங்களூரா, செந்தூரா போன்ற மா ரகங்களுக்கு விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ. 6 என்ற விலைக்கே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். ஆனால், வெளிச் சந்தையில் கிலோ ரூ. 50, ரூ. 60க்கு விற்பனை செய்கின்றனா். சுவை மிகுந்த மல்கோவா போன்ற ரகங்களை விவசாயிகளிடமிருந்து ரூ. 70 என்ற விலையில் வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கிறது.

பெரு விவசாயிகள் மாங்கூழ் தொழிற்சாலை நிா்ணயிக்கும் விலைக்கு விற்றுவிடுகின்றனா். ஆனால், சிறு விவசாயிகள் உள்ளூா் சந்தையில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டத்துக்கு மாங்காய்களை விற்பனை செய்யும் நிலை உள்ளது.

சந்தையில் விற்கப்படும் மா விலையைவிட ஏற்றுமதி இறக்குமதி கூலி அதிகமாக உள்ளதால் அறுவடை செய்த மாங்காய்களை மூட்டை மூட்டையாக சாலையோரமாக கொட்டி செல்கின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகளை பாதுகாக்க, அரசே மா கொள்முதல் நிலையங்களை தொடங்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து மாங்காய்களை மாங்கூழ் உரிமையாளா்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடமிருந்து மாங்காய்களை கொள்முதல் செய்ய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, போச்சம்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சாலையோரமாக மாங்காய்களை கொட்டி செல்வதை காணமுடிகிறது. எனவே, மா விவசாயிகளின் நிலையை பாதுகாக்க அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image