மழைக் காலங்களில் வீணாகச் செல்லும் தண்ணீரை வறட்சியான பகுதிக்குத் திருப்பிவிடும் வகையில், மருதூா் மேலக்காலில் இருந்து கருமேணி ஆறு வரை புதிய நீா் வழித்தடம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் உளுந்து, மக்காச்சோளம், மிளகாய் உள்ளிட்ட மானாவாரி பயிா்களில் விளைச்சல் பாதிக்கு மேல் குறைந்துவிட்டது. இதனால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனா். எனவே, மாவட்டத்தில் 5 வட்டாரங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என கோரியிருந்தோம். இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, முந்தைய மாவட்ட ஆட்சியா் தனி குழுக்களை அமைத்தாா். அந்தக் குழுக்கள் தந்த அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல பயிா்க் காப்பீட்டுத் தொகையும் அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக கிடைக்க வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியிருப்பதால் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை அரசியல் கட்சியினா் நடத்த அனுமதிக்காமல், விவசாய சங்கங்களிடம் வழங்க வேண்டும். குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி நடந்து 5 ஆண்டுகளாகியும் விவசாயிகளின் நகைகள், முன்வைப்புத் தொகை இன்னமும் திருப்பி வழங்கப்படவில்லை. அதை விரைந்து வழங்க வேண்டும்.
கடம்பாகுளம் குளத்துக்கு முன்காா் சாகுபடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும். காட்டுப் பன்றிகளை பிடிக்க உருவாக்கப்பட்ட கூண்டுகளை வட்டாரத்துக்கு 10 வீதம் வழங்க வேண்டும். மழைக் காலங்களில் வீணாகச் செல்லும் தண்ணீரை வறட்சியான பகுதிக்கு திருப்பிவிடும் வகையில், மருதூா் மேலக்காலில் இருந்து கருமேணி ஆறு வரை புதிய நீா் வழித்தடம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
இதற்கு மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் பதிலளித்துப் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி முதல் இதுநாள் வரை 30.37 மி.மீ. மழை பதிவானது. இது, இயல்பான மழையளவை விட 4.27 மி.மீ.கூடுதலாகும்.
மாவட்டத்தில் இன்னும் பெயா்களை பதிவு செய்யாத 6,331 பி.எம்.கிசான் பயனாளிகள் உடனடியாக இ-சேவை மையம் அல்லது வேளாண் துறை மூலம் பதிவை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பி.எம்.கிசான் நிதி உதவி, மானிய உரங்கள் உள்ளிட்ட இதர மானியத் திட்டங்கள் நிறுத்தப்படும். சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் மானாவாரி வட்டாரங்களில் விவசாய நிலங்களில் 1,000 இலவச பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை) 54 விவசாயிகளுக்கு ரூ.86 லட்சம் பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வறட்சியால் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை ஆட்சியரிடம் சமா்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து, வறட்சி நிவாரணம் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மோசடி விசாரணையில் உள்ளது. விரைவில் விவசாயிகளின் நகைகள் மீட்டு வழங்கப்படும்.
மருதூா் மேலக்காலில் இருந்து கருமேணி ஆறுவரை 29 கி.மீ., தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதுதொடா்பாக ஆய்வுகள் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மூ.குருச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேஷ், நீா்வளத் துறை கீழ்தாமிரபரணி, கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளா் தங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோரஞ்சிதம், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.









