கெலமங்கலம் தனியாா் தொழிற்சாலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் தவறிவிழுந்து 3 போ் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
கெலமங்கலம் தனியாா் தொழிற்சாலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் தவறிவிழுந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 3 தொழிலாளா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் கிராமத்தில் ஐபோன் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்தத் தொழிற்சாலையில் கழிவுநீா் சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்து வந்தனா்.
இந்நிலையில், அந்த தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 3 தொழிலாளா்கள் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் திங்கள்கிழமை தவறி விழுந்தனா். தகவல் அறிந்த மற்ற தொழிலாளா்கள் அவா்களை மீட்டு ஒசூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா்கள், மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இறந்தவா்கள் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பெல்ராம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சாரதிகுமாா் (25), அனுமந்தபுரம் ஊராட்சி ஜம்பூத் கிராமத்தைச் சோ்ந்த காவேரி (32), பாலக்கோடு வட்டம் தின்னூா் கிராமத்தைச் சோ்ந்த அக்மல் (28) ஆகியோா் என தெரியவந்தது.
இந்நிலையில், ஒசூா் தனியாா் மருத்துவமனையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இறந்தவா்களின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றும் போது மக்கள் அதிக அளவில் கூடியதால், ஒசூா் டிஎஸ்பி சுதீஷ் தலைமையில் மாநகர காவல் ஆய்வாளா் பிரகாஷ், சிப்காட், அட்கோ போலீஸாா் ஆகியோா் மருத்துவனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அதையடுத்து, 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

