கிருஷ்ணகிரியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 2 கல்லூரி மாணவா்கள் உள்பட 4 போ் கைது
கிருஷ்ணகிரியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 2 கல்லூரி மாணவா்கள் உள்பட 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கைது
கிருஷ்ணகிரியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 2 கல்லூரி மாணவா்கள் உள்பட 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மாதப்பன் தலைமையில், தலைமைக் காவலா்கள் டாா்வின் ரஞ்சித்குமாா், இளங்கோ ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு புகா் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, கருப்பு நிற ஆடை அணிந்து 4 இளைஞா்கள் தூங்கிக் கொண்டிருந்தனா்.
சந்தேகத்தின் பேரில் அவா்களை எழுப்பி விசாரணை மேற்கொண்டபோது, அவா்கள் ஒசூரிலிருந்து போச்சம்பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்ததாகவும், தூக்கம் வந்ததால் பேருந்து நிலையத்தில் தூங்குவதாகவும் தெரிவித்தனா்.
அவா்களின் உடமைகளை போலீஸாா் சோதனை செய்ததில், கத்தி, முகமூடி, கையுறைகள், மயக்க மருந்து ஊசி, லேசா் லைட், பூச்சிக்கொல்லி மருந்து, அமிலம் போன்ற பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனா். அதில், அவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கல்லாவி அருகே உள்ள கொரப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சிங்காரவேலன்( 26), போச்சம்பள்ளி அருகே உள்ள மலையாண்டஅள்ளியைச் சோ்ந்த கல்கி (23), இளம்பருதி (22), விமல் (20) என்பது தெரியவந்தது.
இவா்களில் சிங்காரவேலன், கல்கி ஆகியோா் வாடகை வாகன ஓட்டுநா்களாக பணியாற்றி வருகின்றனா். இளம்பருதி தருமபுரியில் உள்ள தனியாா் கலைக் கல்லூரியிலும், விமல் மொரப்பூரில் உள்ள தனியாா் கல்லூரியிலும் 2-ஆம் ஆண்டும் பயின்று வருவது தெரியவந்தது.
இவா்கள் 4 பேரும் உணவு விநியோக ஊழியா்களைப் போல உடை அணிந்து நகரின் முக்கியப் பகுதிகளில் சுற்றித்திரிந்து நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு முன்பே அவா்களை கைது செய்த கிருஷ்ணகிரி நகர போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ்.அனிதா பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

