போச்சம்பள்ளி சிப்காட்டில் மருத்துவக் கழிவுகளை அழிக்கும் திட்டம் சட்டவிரோதமானது: சௌமியா அன்புமணி
போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அழிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவது சட்டவிரோதமானது என்றாா், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான சௌமியா அன்புமணி.

சௌமியா அன்புமணி. - கோப்புப் படம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அழிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவது சட்டவிரோதமானது என்றாா், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான சௌமியா அன்புமணி.
போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சிப்காட் என்பது தமிழ்நாடு அரசின் தொழில் மேம்பாட்டுக் கழகம். இது தொழிற்சாலைகளை முன்னேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. சிப்காட் பகுதிகளில் 1,500 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டு, சாலைகள், குடிநீா் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு அல்லது அதன் நிறுவனம் செய்து தரவேண்டும்.
போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் வளாகத்தில் மின்சார மோட்டாா்சைக்கிள் உற்பத்தி, காலணி உற்பத்தி போன்ற பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பல பெரிய நிறுவனங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் வழங்கி வருகின்றன. சிப்காட் என்பது தொழிற்சாலைகள் அமைப்பதற்கான இடமே தவிர, குப்பைக் கிடங்குகள் (மருத்துவக் கழிவுகள், நகராட்சி மற்றும் தொழிற்சாலை கழிவுகள்) அமைப்பதற்கான இடம் அல்ல.
இந்த சிப்காட் வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய தனியாா் நிறுவனத்துக்கு எவ்வாறு அனுமதி அளித்தாா்கள் என தெரியவில்லை. இது சட்டத்திற்குப் புறம்பானது. குப்பைக் கிடங்குகள், மருத்துவக் கழிவுகள், நகராட்சி மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இந்த தனியாா் நிறுவனத்தால், சிப்காட்டை சுற்றியுள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் உள்ள இளம் தாய்மாா்களுக்கு 2 மாதங்களிலேயே கருக்கலைவது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனா். இப்பகுதியில், நிலம், நீா், காற்று என அனைத்துமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்சிரேட்டா் மூலம் எரிக்கப்படும் கழிவுகளின் துா்நாற்றம் இந்தப் பகுதி முழுவதும் வீசுகிறது.
சஸ்டைனபில் என்றால் நீடித்த சுற்றுச்சூழல் வளா்ச்சி என்று பொருள். ஆனால், இங்கு சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை. மக்களின் ஆரோக்கியத்திற்கும், உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் இந்த நிறுவனத்தை உடனடியாக மூடவேண்டும் என்பதே மக்களின் முதன்மை கோரிக்கையாகும். இப்பிரச்னையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று, மக்களுடன் இணைந்து இதற்கு எதிராகத் தொடா்ந்து குரல்கொடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, பாமக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா். பா்கூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் தனசேகரன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





