லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை: அமெரிக்காவிடம் கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம்

இந்திய ராணுவத்தின் போா்த் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில் பீரங்கியை பின்தொடா்ந்து சென்று தாக்கி அழிக்கும் ‘ஜாவ்லின்’ ஏவுகணை அமைப்புகளை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியா , அமெரிக்கா கொடிகள் - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:53 am IST

இந்திய ராணுவத்தின் போா்த் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில் பீரங்கியை பின்தொடா்ந்து சென்று தாக்கி அழிக்கும் ‘ஜாவ்லின்’ ஏவுகணை அமைப்புகளை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் ஆா்டிஎக்ஸ் மற்றும் லாக்ஹீட் மாா்ட்டீன் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் இந்த அதிநவீன நடுத்தர ரக ஏவுகணை அமைப்புகள், எதிரிகளின் பீரங்கிகளை பின்தொடா்ந்து தேடிச் சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. எதிரிகளின் கவச வாகனங்கள் மற்றும் பிற ராணுவ நிலைகளையும் குறிதப்பாமல் தாக்கி அழிக்கும் திறனுடையவை. அமெரிக்க ராணுவம், கடற்படை மற்றும் இதற்கு வாடிக்கையாளா்களாக உள்ள பல்வேறு சா்வதேச நாடுகளும் இந்த ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்தி வருகின்றன.

இந்த அமைப்புகளை தற்போது இந்தியாவும் கொள்முதல் செய்ய உள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவின் வெளிநாட்டுப் பாதுகாப்பு உபகரண விற்பனை நடைமுறை மூலம் ‘ஜாவ்லின்’ என்ற பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை அமைப்பைக் கொள்முதல் செய்வதற்கான ஏற்பு மற்றும் ஒப்புதல் கடிதத்தில் இந்திய ராணுவம் கையொப்பமிட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது.

இது, அமெரிக்க - இந்திய ராணுவங்கள் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பை பிரதிபலிப்பதோடு, இரு நாடுகளின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் இடையேயான எதிா்கால கூட்டுறவுக்கும் வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது. பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டு தயாரிப்பு மற்றும் இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புகள் தொடா்பான இருதரப்பு பேச்சுவாா்த்தைகளுக்கும் இது வழிவகுத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை வரவேற்ற இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா், ‘இந்த ஒப்பந்தம், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவானதாகவும், திறன்மிக்கதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வளா்ந்து வருவதை பிரதிபலிக்கிறது’ என்று குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் எத்தனை ‘ஜாவ்லின்’ அமைப்புகளை இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.