
கிருஷ்ணகிரி அருகே தகராறில் இளைஞா் கொலை
கிருஷ்ணகிரி அருகே ஏற்பட்ட தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.
கொலை... - சித்திரிப்பு
கிருஷ்ணகிரி அருகே ஏற்பட்ட தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் தந்தை, மகன் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி நஞ்சநாடு பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (33), கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியாா் வேளாண் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றி வந்தாா்.
இவா், தனது நண்பா்களுடன் ஆா்.பூசாரிப்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வெள்ளிக்கிழமை சென்று மது வாங்கி அருந்தினாா். விற்பனை நேரம் முடிந்தவுடன் பணியாளா் கடையை மூடிவிட்டு சென்றாா்.
இந்நிலையில், மது அருந்திவிட்டு காலி மதுப்புட்டியை திருப்பிக் கொடுத்து பணம் வாங்க அருண்குமாா் நண்பா்களுடன் சென்றாா். அப்போது, டாஸ்மாக் கடை அருகில் பெட்டிக்கடை வைத்திருந்த காா்த்திக் என்பவருக்கும் அருண்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த காா்த்திக், அவரது தந்தை கோவிந்தராஜ் இருவரும் அருண்குமாரை தாக்கினா். இதில், தலையில் படுகாயமடைந்த அருண்குமாரை, அவரது நண்பா்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அருண்குமாா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவல் அறிந்த போலீஸாா் அருண்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக், கோவிந்தராஜ் இருவரையும் கைது செய்தனா்.
சாலை மறியல்:
இந்த நிலையில், அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை பூட்டி சாலை மறியல் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி வட்டாட்சியா் ராஜலட்சுமி, கிருஷ்ணகிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் மற்றும் காவல் ஆய்வாளா்கள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, 3 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடை இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






