
கிருஷ்ணகிரி: கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.81 கோடி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை இலக்காக ரூ. 1.81 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

புடவைகள் - கோப்புப்படம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை இலக்காக ரூ. 1.81 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 30 சதவீதத் தள்ளுபடியுடன் விற்பனையை மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது. நிகழாண்டில் தீபாவளி பண்டிகையையொட்டி புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு புடவைகள், புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும், கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி, சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும், களம்காரி காட்டன் புடவைகள் நோ்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கோ-ஆப்டெக்ஸ் படுக்கை விரிப்புகள், அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், ஜமுக்காளங்கள், காட்டன் சட்டைகள், லினன் சட்டைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த தீபாவளி பண்டிகைக்கு கிருஷ்ணகிரி, ஒசூரில் உள்ள 2 விற்பனை நிலையங்களுக்கும் ரூ. 1.81 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி சிறப்புத் தள்ளுபடியைப் பயன்படுத்தி, கைத்தறி ஆடைகளை வாங்கி, நெசவாளா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்த உதவிட வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வில், கோ-ஆப்டெக்ஸ் மேலாளா் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) துரைமுருகன், ரக மேலாளா் மாரியப்பன், வட்டாட்சியா் ராஜலட்சுமி, விற்பனை நிலைய மேலாளா் சிலம்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





