
எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் விமர்சனம்...

தமிழக முதல்வர் விஜய் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? என தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆத்தூரில் இன்று (செப். 25) முதல்வா் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, திமுகவும் பாஜகவும் வேறு வேறு இல்லை எனவும் தில்லியில் இருக்கும் பாஜகவுக்கு பெயர் திமுக, தமிழ்நாட்டில் இருக்கும் திமுகவுக்கு பெயர் பாஜக எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதில் இருந்து எத்தனை முறை முதல்வர் விஜய் பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறார் என முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“திமுகவும் பாஜகவும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பாஜக’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென லைவ்-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பாஜகவை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?” எனக் கூறியுள்ளார்.
Summary
DMK leader M.K. Stalin has questioned TN CM Vijay, asking how many times he has spoken against the BJP since the inception of his party.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





