
கரூர் பலி, ஜெம் வீரமணி வழக்கு, அந்நியன் மாதிரி..! முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி!
தமிழக முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி...

முதல்வர் விஜய் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
ஜெம் வீரமணி வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்களுக்குத் தெரியாது என தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் வரும் அக்.6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆத்தூரில் இன்று (செப். 25) முதல்வா் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததால் மரகதம் குமரவேல் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ததாகக் கூறிய முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த நிலையில், வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே தே.ஜ.கூட்டணி எம்எல்ஏக்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? என முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே, இன்று மதுராந்தகம் ஷூட்டிங்-இல் உங்களின் டையலாக் டெலிவரி-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அதிமுகவில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, தவெக தூய சக்தி, திமுக தீய சக்தி என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே தேஜகூ கூட்டணி எம்எல்ஏ-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா?
தவெகவிடம் எவ்வளவு வாங்குனீங்க? எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்? அடுத்து, திமுகவும் பாஜகவும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள்.
சட்டமன்றத்தில் பாஜக என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென லைவ்-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பாஜகவை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
திமுக மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன் என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி மோட்-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே! நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்:
வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயர்வு திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம், வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம் இவ்வளவுதான்!
பெண்களைத் திமுகவினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் விர்ச்சுவல் அப்யூஸர் (Virtual Abuser)-களின் டிராக் ரெக்கார்ட்-ஐ எடுத்துப் பாருங்கள்.
ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்- என ஹை பிட்ச்-இல் கத்தினீர்களே? உங்கள் ஸ்கிரிப்ட் பேப்பர்-ஐ அப்டேட் செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல.
எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, ‘எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்’- என்றுதான் நான் சொன்னேன்.
உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ திமுகவோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் சிஎம் சார்” எனக் கூறியுள்ளார்.
Summary
EX CM and DMK leader M.K. Stalin has questioned TN CM Vijay: "How many times have you spoken against the BJP since the inception of the TVK party?"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





