
திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்.. மானங்கெட்ட மாற்றம்! மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!
திமுக முப்பெரும் விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின்
திமுக முப்பெரும் விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுகவின் முப்பெரும் விழா ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடைபெறும். அண்ணா, பெரியார் பிறந்தநாளுடன் திமுக தொடங்கப்பட்ட நாளும் இம்மாதத்தில் வருவதால், ஆண்டுதோறும் இம்மாதத்தில் முப்பெரும் விழாவை திமுக நடத்தி வருகிறது.
இந்தாண்டுக்கான திமுக முப்பெரும் விழா சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப். 19) மாலை 5 மணியளவில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில், பேசிய மு.க. ஸ்டாலின் வரவிருக்கும் இடைத்தேர்தல் பற்றிப் பேசுகையில், தவெக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதில்,”ஒரு முறை மக்கள் ஏமாந்திருக்கலாம். தொடர்ந்து ஏமாறுவார்கள் என்று நினைத்தால், ஏமாறப்போவது இப்போது இருக்கும் முதலமைச்சர்தான். அவதூறுகளைப் பரப்பி, கொச்சையாகப் பேசி, தி.மு.க.வை அவமானப்படுத்தலாம், பலவீனப்படுத்தலாம் என்று நினைத்துப் பலர் செயல்படுகிறார்கள். இதையெல்லாம் 78 வருடங்களாக நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன இந்த அவதூறுகளைப் பரப்பும் எதிரிகள்தான் மாறிக் கொண்டிருக்கிறார்களே தவிர, நாங்கள் உறுதியாக நிலைத்து நின்று கொண்டுதான் இருக்கிறோம். தன்னை விட இயக்கமும் கொள்கையும்தான் பெரிது என்று நினைக்கிறவர்கள்தான் எங்கள் உடன்பிறப்புகள். நாங்கள் வட்டியும் முதலுமாகத் திருப்பித் தர காத்திருக்கிறோம். நேரம் விரைவிலேயே வரும்.
விரைவில் இரண்டு தொகுதி இடைத்தேர்தல் வரப்போகிறது! இது முறையாக வரும் தேர்தலா? இல்லை, திணிக்கப்பட்ட தேர்தல்! எவ்வளவு அகம்பாவம் இருந்தால், வேறு கட்சியில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை விரலில் வைத்த மை ஈரம் காயவதற்கு முன்னால் ராஜினாமா செய்ய வைத்திருப்பார்கள்? அதுமட்டுமல்ல, வெட்கமே இல்லாமல் இப்போது அவர்களையே தங்களுடைய சின்னத்தில் மீண்டும் நிற்க வைத்திருக்கிறார்கள். கேட்டால் – குதிரை பேரம் இல்லையாம்; தூய ஆட்சியாம்! இதுதான் இவர்களின் மானங்கெட்ட மாற்றமா!
பொதுவாகச் சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால்தான் இடைத்தேர்தல் வரும். முதல்முறையாக ஜனநாயகம் மரணமடைந்து இடைத்தேர்தல் வருகிறது. இதைத்தான் நம் உடன்பிறப்புகள் ஆட்சியின் தோல்விகளோடு சேர்த்து, இரண்டு தொகுதியிலும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அரசாங்கமே இன்றைக்குச் செயலிழந்து போயிருக்கிறது. காலையில் கூடச் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள்; ஒரே நாளில் 8 கொலைகள்! அதுவும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில். இரட்டைக் கொலைகள், ஆணவக் கொலைகள், லாக்கப் படுகொலைகள், டாஸ்மாக் தகராறு கொலைகள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலைகள் என ஒவ்வொரு நாளும் விடிந்தால் எண்ண முடியாத அளவிற்கு கொலைகள்.
மின்சாரம் இல்லாமல் நடுராத்திரியில் குழந்தைகளோடு மக்கள் போராடுகிறார்கள்! தொழில்கள் எல்லாம் முடங்கிக் கிடக்கின்றன! ஏழை மக்களுக்கு எட்டாத அளவிற்கு விலைவாசி உயர்ந்து, பெண்கள் எல்லாம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கவே பயப்படுகிறார்கள்! வருமானம் போதவில்லை! இவர்கள் சொன்ன 2,500 ரூபாயும் வரவில்லை! பணம் கொடுத்தாலும் ஆவின் பால் கிடைக்கவில்லை! ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது; 12 பேர் இறந்துவிட்டார்கள். இனிமேல்தான் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள்.
இது எல்லாவற்றையும் கவர்ச்சியால் சரிகட்டலாம் என்று ஆணவத்தோடு இருக்கும் ஒருவர்தான் முதலமைச்சராக இருக்கிறார். ஊடகங்களைச் சந்தித்துப் பதில் சொல்ல மாட்டேன் என்று திமிராக இருக்கிறார். இந்தத் திமிர்த்தனத்திற்கும் ஆணவத்திற்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.
அதனால், மதுராந்தகம், தாராபுரம் வாக்காளப் பெருமக்களே! ஆளுங்கட்சிக்குத் தக்க பாடம் புகட்டத் தி.மு.க.விற்கு வாக்களியுங்கள் என்று இந்த முப்பெரும் விழா மேடையில் நின்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
Summary
Speaking at the DMK grand function, M.K. Stalin sharply criticized the TVK government.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






