

கடந்த 25 ஆண்டுகளாக விசைத்தறி தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ஏறத்தாழ 10 சதவீதம் அளவு விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. மேலும், 15 சதவீத அளவுக்கு விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறிக் கூடங்களை குத்தகைக்கு விட்டு மாற்றுத் தொழிலுக்குச் சென்றுவிட்டனர்.
ஜவுளித் தேவையில் 60 சதவீதம்: இந்தியாவின் ஜவுளித் தேவையில் 5 சதவீதம் மட்டுமே ஜவுளி ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுமார் 20 சதவீதம் கைத்தறி மூலமும், 15 சதவீதம் பின்னலாடை மூலமும், சுமார் 60 சதவீதம் விசைத்தறி மூலமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஜவுளித் தொழிலில் விசைத்தறி முக்கியப் பங்கை வகிக்கிறது.
நாடு முழுவதும் ஏறத்தாழ 19 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. 70 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிரம் 8 லட்சம் தறிகளுடன் முதலிடத்திலும், தமிழகம் 5 லட்சம் தறிகளுடன் இரண்டாவது இடத்திலும், குஜராத் 3 லட்சம் தறிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
15 லட்சம் தொழிலாளர்கள்: தமிழகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறத்தாழ 15 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையாக இத் தொழில் நடைபெறுகிறது. தவிர, நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் விசைத்தறித் தொழில் நடைபெறுகிறது.
3 பிரிவு நெசவாளர்கள்: இத் தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் 3 பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றனர். முதலாவது பல நூறு தறிகளை வைத்து தொழிற்சாலை வடிவத்தில் தொழில் நடத்தும் மாஸ்டர் வீவர்ஸ், இன்னொரு பிரிவினர் நூலும், கூலிப் பணமும் வாங்கி தானும், தனது குடும்ப உறுப்பினர்களும் அல்லது ஓரிரு தொழிலாளர்களையும் பயன்படுத்தி சொந்தத் தறிகளில் வேலை செய்வோர். மூன்றாவது பிரிவு பெரும்பகுதியான கூலி உழைப்பாளிகள்.
கால் நூற்றாண்டுகளாகத் தொடரும் நெருக்கடி: கடந்த 1990-க்கு பிறகு நவீன தாராளமயக் கொள்கை, தடையற்ற இறக்குமதி போன்றவற்றால் ஏற்றுமதி ரகங்களை உற்பத்தி செய்வோர் கடுமையாகப் பாதிப்படைகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடுமையான மின்வெட்டு, மூலப்பொருள்கள் விலையேற்றம் ஆகியவற்றால் சிறிய விசைத் தறியாளர்கள் பலர் விசைத்தறிக் கூடங்களை நடத்த முடியாமல் கைவிட்டனர்.
நடுத்தர உற்பத்தியாளர்கள், விசைத்தறிக் கூடங்களை குத்தகைக்கு விட்டனர்.
சிறிய, நடுத்தர விசைத்தறி உரிமையாளர்கள் பலரும், தனியார் நிதி நிறுவனங்களிலும், வட்டித் தொழில் செய்வோரிடமும் கடன் வாங்கித்தான் தொழில் நடத்தும் நிலையில் உள்ளனர்.
போராடும் நெசவாளர்கள்: கடன் பிரச்னையில் சிக்கி பலர் தற்கொலை செய்தது உண்டு. நாமக்கல் மாவட்டத்தில் வாங்கிய கடனைக் கட்ட சிறுநீரகங்களை விற்ற அவலம் பள்ளிபாளையம், குமாரபாளையம் போன்ற பகுதிகளில் உள்ள விசைத்தறி நெசவாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நேரிட்டது.
விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு, பண்டிகைக் கால ஊக்கத்தொகை போன்றவற்றுக்காக ஒவ்வோர் ஆண்டும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இப்போதுள்ள நிலையில், இத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள், இவர்கள் அடுத்த 20 ஆண்டுகள் இத் தொழிலில் ஈடுபட முடியும். அதன் பிறகு 10 முதல் 100 தறிகள் வரை வைத்து சொந்தமாக நெசவு செய்யும் சிறிய, நடுத்தர விசைத்தறிக் கூடங்கள் மறைந்துபோகும் நிலை ஏற்படும்.
தொடரும் நெருக்கடியால், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 15 சதவீதம் அளவுக்கு சிறிய, நடுத்தர விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. 25 சதவீதம் அளவு விசைத்தறிக் கூடங்களை அதன் உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கே குத்தகைக்கு விட்டுள்ளனர் என்கிறார் நாமக்கல் மாவட்டம், சின்ன எலச்சிப்பாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் எ.சண்முகம்.
சுமைகள் குறைக்கப்பட வேண்டும்: திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் எம்.பழனிச்சாமி கூறியது:
விசைத்தறிக் கூடங்களில் 750 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் விசைத்தறிக் கூடங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது சிறிய விசைத்தறி நெசவாளர்களின் சுமையை சற்று குறைக்கும். அதே சமயத்தில் சிறிய, நடுத்தர விசைத்தறி நெசவாளர்களைப் பாதுகாக்க அரசின் கொள்கைகள் மாற வேண்டும்.
நூல், மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவித்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.