மோகனூரில் உள்ள காளியம்மன், நாவலடியான், மாரியம்மன், திருக்கோயில்கள் மற்றும் நாவலடியான் ராஜகோபுர குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து 47 நாள்கள் மண்டல பூஜை நடைபெற்றது. 48-ஆவது நாள் மண்டல பூஜை நிறைவு விழா மற்றும் கும்பாபிஷேக விழா மலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கான தொடக்க விழா 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. மதியம் தீபாராதனையுடன், மாலை லட்சார்ச்சனை நிறைவடைந்தது. இரவு சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மோகனூர் காவிரிக்கரையில் உள்ள ஈஸ்வரன் கோயில் படித்துறையிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து நாவலடியானுக்கு அபிஷேகம் செய்தனர். அதைத் தொடர்ந்து 1,008 சங்காபிஷேகமும், பின்னர் அலங்காரத்துடன் கூடிய மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் குடமுழுக்கு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்குப் பரம்பரை நிர்வாக அறங்காவலரும் திருப்பணிக் குழுவின் தலைவருமான பி. சிங்கையன் தலைமை வகித்தார். பரம்பரை அறங்காவலரும் திருப்பணிக் குழுவின் தலைவருமான எஸ்.பி. கந்தசாமி முன்னிலை வகித்தார். பரம்பரை அறங்காவலரும் திருப்பணிக் குழுப் பொருளாளருமான வேலு. ராசாமணி வரவேற்றார்.
பரம்பரை அறங்காவலரும் திருப்பணிக் குழுத் தலைவருமான ஆர். சரவணன் பேசினார். விழாவில் பரம்பரை அறங்காவலர்களும் திருப்பணிக் குழுப் பொறுப்பாளர்களான கே. சுப்பிரமணியம், எஸ். சதாசிவம், கே. ராஜலிங்கம், வி. வசந்தகுமார், பி. நல்லுசாமி , என். கிருஷ்ணமூர்த்தி, எம். சக்திவேல், வி. நவலடி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏகள் கே.பி.பி.பாஸ்கர், உ.தனியரசு, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பாரி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், கரூர் முன்னாள் எம்.எல்.ஏ வடிவேல், சென்னை சம்பா பதிப்பகம் ரத்தினம் திருப்பதிசாமி, செல்வராஜ், திரிவேணி பாலசுப்ரமணியம், மண்டல துணை தணிக்கை அலுவலர் சரஸ்வதி, வாங்கலம்மன் கோயில் செயலர் தங்கராசு, கரூர் காமராஜ் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
பரம்பரை அறங்காவலரும், திருப்பணிக்குழு செயலருமான சி.பி.நவலடி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

