ராசிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. ராசிபுரம் நகராட்சி அலுவலகம் சார்பில் நடைபெற்ற நாட்டின் 72-வது சுதந்திர தின விழாவில், நகராட்சி ஆணையாளர் ப.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். முன்னதாக அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தேசியக்கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர். மேலும் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் பாலகுமாரராஜூ, இளநிலை பொறியாளர் வை.பரமசிவம், நகராட்சி மேலாளர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதே போல், ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி மாளிகை முன்பாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில், நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.முரளி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.விநாயகமூர்த்தி வரவேற்றார். ஏ.என்.சண்முகம் முன்னிலை வகித்தார். தேசபக்தர் கே.எம்.பிள்ளாரி செட்டியார் தேசியக்கொடியேற்றி வைத்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். மாவட்ட வர்த்தக அணி தலைவர் டி.ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், ரோட்டரி சங்கம் சார்பில் சங்க அலுவலகம் முன்பாக நடைபெற்ற விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் எல்.சிவக்குமார் தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் எல்.சிவக்குமார், செயலர் எஸ்.முரளி, கருணாகர பன்னீர்செல்வம், இ.சுரேந்திரன், அம்மன் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராசிபுரம் வனச் சரக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ராசிபுரம் வனச் சரகர் பெருமாள் கொடியேற்றி வைத்தார்.
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தி சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம்.பாலசுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜி.வெங்கடேஷ், செயல் அலுவலர் கு.ராஜகோபால், ஆய்வாளர் இரா.செல்வி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
ராசிபுரம் கோல்டன் நற்பணி மன்றத்தின் சார்பில் நாமக்கல் சாலையில் உள்ள அலுவலகம் முன்பாக நடைபெற்ற விழாவில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்ச்சியில், மன்றத் தலைவர் நா.குபேர்தாஸ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெண்ணந்தூர் வட்டாரம் அத்தனூர் பேரூர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழாவில், பேரூர் காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர்.பூபதி தேசிய கொடியேற்றி வைத்துப் பேசினார். இதில் வட்டார தலைவர் சொக்கலிங்கமூர்த்தி, கார்த்திகேயேன், அர்ததநாரி, பழனிவேல், ராஜா செந்தில், ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவியர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சுதந்திர தினவிழா ராசிபுரம் வி.நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்பள்ளிக்கு இளைஞர் காங்கிரஸ் சார்பாக பீரோ நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும் தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.எம்.ஷேக்நவீத் பங்கேற்றுப் பேசினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் அ.மணிகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சேந்தமங்கலம் மார்லிங் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில், அதன் தலைவர் எஸ்.செந்தில்முருகன் பங்கேற்று கொடியேற்றி, முதியோர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.