இலவச மின்சாரம் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மண்பாண்டம் செய்யக்கூடிய மின்சாரம் மூலம் இயங்கும் மின் சக்கரம் மாவட்டத்திற்கு 100 சக்கரம் வீதம்
Updated on
1 min read

மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மண்பாண்டம் செய்யக்கூடிய மின்சாரம் மூலம் இயங்கும் மின் சக்கரம் மாவட்டத்திற்கு 100 சக்கரம் வீதம் வழங்கி அதற்குரிய மின்சாரமும் இலவசமாக வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்க மாநில மாநாடு தமிழ் மாநில கொங்கு குலாலர் பேரவை மாநிலத் தலைவர் டி. குமரேசன் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மாவட்டத் தலைவர்கள் சிங்காரவேல், சரவணன் முன்னிலை வகித்தனர்.  நாமக்கல் மாவட்டச் செயலர் சுப்பிரமணி வரவேற்றார்.  நாமக்கல் எம்பி பி.ஆர். சுந்தரம், எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சேம. நாராயணன், துணைத் தலைவர் பி.என். குப்புசாமி ஆகியோர் பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழையால் பாதிக்கப்பட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ. 4,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது.
வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அந்தந்த  கட்சியில் உள்ள குலாலர் சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலுக்கு ஏற்ற களிமண்ணை இலசமாக எடுத்துக் கொள்ள மாநிலம் முழுவதற்கும் ஏற்ற வகையில் ஒரே மாதிரியான உத்தரவை தமிழக அரசு வழங்க வேண்டும். மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மண்பாண்டம் செய்யக்கூடிய மின்சாரம் மூலம் இயங்கும் மின் சக்கரம் மாவட்டத்துக்கு 100 சக்கரம் வீதம் வழங்கி அதற்குரிய மின்சாரமும் இலவசமாக வழங்கவேண்டும்.
மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களை ஒருங்கிணைத்து, மாநில மண்பாண்ட கூட்டுறவு இணையம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. மண்பாண்டத் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட கலைப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.  மாநாட்டு சிறப்பு ஆலோசகர் லோகநாதன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com