ஏர்செல் செல்லிடப்பேசி சேவை நாமக்கல்லில் புதன்கிழமை காலை முதல் முற்றிலுமாக செயலிழந்தது. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏர்செல் செல்லிடப்பேசி சேவை கடந்த 2 மாதங்களாக சீரான முறையில் இல்லை. இந்த நிலையில், கடன் சுமை காரணமாக அந்த நிறுவனம் தொடர்ந்து இயங்க முடியாத நிலையில் உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த நிலையில், நாமக்கல் நகரில் புதன்கிழமை காலை முதல் ஏர்செல் சேவை முற்றிலுமாக செயலிழந்தது.
இதனைத் தொடர்ந்து, ஏர்செல் வாடிக்கையாளர்கள், வேறு நிறுவனத்துக்கு தங்களது சேவையை மாற்றிக்கொள்ள செல்லிடப்பேசி சேவை மையங்களுக்கு சென்றனர். அதற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். முழுவதுமாக சேவை செயலிழந்த நிலையில், வாடிக்கையாளர்கள் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏர்செல் சேவை மையத்தை முற்றுகையிட்டனர். புதன்கிழமை மாலைக்குள் சேவை கிடைத்துவிடும் என பணியாளர்கள் உறுதியளித்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அங்கு போலீஸார் வந்து வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
நாமக்கல் போன்று பரமத்தி வேலூர், ராசிபுரம் பகுதிகளிலும் ஏர்செல் செல்லிடப்பேசி சேவை செயலிழந்ததால் அப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.