கழிவுநீர் தொட்டியாக மாறிய கொசவம்பட்டி ஏரி: சுகாதார சீர்கேட்டால் பரிதவிக்கும் மக்கள்

நாமக்கல் நகரை ஒட்டியுள்ள கொசவம்பட்டி ஏரி நகராட்சியின் ஒட்டு மொத்த திரவக் கழிவுகளை சேகரித்து வைக்கும் கழிவு நீர் தொட்டியாக மாறியுள்ளது.
Updated on
2 min read

நாமக்கல் நகரை ஒட்டியுள்ள கொசவம்பட்டி ஏரி நகராட்சியின் ஒட்டு மொத்த திரவக் கழிவுகளை சேகரித்து வைக்கும் கழிவு நீர் தொட்டியாக மாறியுள்ளது. இதனால் இந்தப் பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டால் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் கொசவம்பட்டி ஏரி 38 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த ஏரியில் தான் தேங்கி நிற்கிறது.  அதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. 
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொசவம்பட்டி ஏரியைத் தூர்வாராமல் கிடப்பில் போட்டதால் செடி, கொடி, மரம் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும், சேறும், சகதியும் அதிக அளவில் சேர்ந்துள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் குடியிருப்போர் இரவு, பகல் என எந்த நேரமும் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.   
பொதுப் பணித் துறை, நகராட்சி, வருவாய்த் துறை என எந்தத் துறையின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தனியாக ஏரி இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நீர் நிலை புறம்போக்கு என கணக்கு காட்டப்பட்டு நகராட்சி வசம் எடுத்துக் கொண்டது.
அதைத்தொடர்ந்து, இந்தக் குட்டையைத் தூர்வாரி பல்வேறு வசதிகளைக் கொண்டு பூங்கா, படகு சவாரி செல்லும் அளவுக்கு அழகுபடுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வெளிமாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஆய்வு செய்யப்பட்டது. அதற்காக பல லட்சம் ரூபாய் செலவும் செய்யப்பட்டது. அத்துடன் அந்தத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. இந்தத் திட்டம் என்னானது? மதிப்பீடு செய்யப்பட்டதா? எப்போது செயல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. இதனால் தற்போதும், நகராட்சி கழிவுநீர் தொடர்ந்து கொசவம்பட்டி குட்டையில் கலந்து வருவதால் அந்தப் பகுதி கடும் சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது. 
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் கே.எம்.ஷேக் நவீத் கூறியது: நாமக்கல் நகராட்சியில் உள்ள கழிவுநீர் அனைத்தும், கொசவம்பட்டி ஏரியில்தான் கலக்கிறது. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ரயில் நிலையம் அருகே உள்ள சாமியப்பா காலனி வழியாக சாக்கடை கழிவுநீர் சென்று வேட்டாம்பாடி ஏரியில் கலக்கிறது. அவ்வாறு செல்வதால் வீடுகளில் கறுப்பு படர்ந்து வீணாகி வருகிறது. துர்நாற்றம் தாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். குட்டையை அழகுப்படுத்தும் திட்டத்தை அறிவித்தனர். அதுவும் அறிவிப்போடு நின்றுவிட்டது என்றார். 
கிடப்பில் போடப்பட்ட சீரமைப்புத் திட்டம்... 
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது:  நகரையொட்டியுள்ள கொசவம்பட்டி ஏரிக்கு மூன்று பகுதிகளில் இருந்து சாக்கடைக் கழிவுநீரும், மழைநீரும் வந்து சேருகின்றது. இந்த ஏரி தொடர்ந்து மாசுபட்டு வருவதைத் தடுக்க, ஏரியை தூர்வாரி தூய்மைப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைத்திட நகராட்சி நிர்வாகம்
திட்டமிட்டுள்ளது. 
இந்தப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனம் ஒன்று தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டது. இந்நிறுவனம் கொசவம்பட்டி ஏரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் கொசவம்பட்டி ஏரியைத் தூர்வாரி மேம்படுத்தும் பணிக்கு ரூ.40.39 கோடி செலவாகும் என மதிப்பிட்டு இறுதி வரைவு அறிக்கையை கடந்த 2014 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. 
தொடர்ந்து, இந்த மதிப்பீட்டில் கொசவம்பட்டி ஏரியை மேம்படுத்தி பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைத்திட தமிழக அரசின் சுற்றுலாதள மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதரத் திட்டங்களின் கீழ் மானியம் வழங்கிடக் கோரி தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதற்கான கருத்துரு நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
இப்போது அனுமதி கிடைத்தால் கூட திட்ட மதிப்பீடு ரூ.100 கோடி அளவுக்கு உயர வாய்ப்புள்ளது. இதனால் இந்த அளவுக்கு செலவு செய்ய சுற்றுலா துறையோ அல்லது உள்ளாட்சி துறையோ முன்வராது.
இதனால் இந்த ஏரியைத் தூர்வாரி பழைய நிலைக்கு கொண்டுவர வாய்ப்பில்லை என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com