நாமக்கல் நகராட்சியில் தினமும் சேரும் குப்பைகளை 20 டன்னாக குறைக்கும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு வர்த்தக நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் மூலம் நகரப் பகுதிகளில் குப்பைகள் சேருவதை தடுக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி, நகராட்சிப் பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் தினமும் 50 கிலோவுக்கு மேல் குப்பையை உருவாக்குபவர்கள், அதனை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து நகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். அல்லது அந்த இடத்திலேயே குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாக மாற்றிக்கொள்ளலாம்.
இதுகுறித்து விளக்கம் அளிக்க ஹோட்டல்கள், திருமண மண்டபம், கல்வி நிலையங்களைச் சேர்ந்த உரிமையாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் நகராட்சி ஆணையர் கே.பாலசுப்பிரமணியன் பேசியது: நாமக்கல் நகராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன் வரை தினமும் 48 டன் குப்பைகள் சேர்ந்தன. இப்போது தினமும் 38 டன்னாக குறைந்துள்ளது. இதனை மிக விரைவில் 20 டன் என்ற அளவுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம்.
நாமக்கல் நகராட்சியில் 50 கிலோவுக்கு மேல் குப்பை சேரும் இடங்கள் என 85 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் குப்பைகளை கட்டாயம் தரம் பிரித்து தான் வழங்க வேண்டும். தரம் பிரிக்காமல் குப்பைகளை சேகரித்து வைத்தால், அந்த குப்பைகளை பெற்றுக்கொள்ள மாட்டோம். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்படும்.
தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளால் கடந்த 6 மாதங்களில் நாமக்கல் நகராட்சியில் 15 அடிக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் அந்த வளாகத்திலேயே குப்பைகளை அழிக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகரில் பெருமளவில் குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு அந்த குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது, அதனை உரமாக மாற்றுவது குறித்து விளக்கம் அளிக்க நாமக்கல் நகராட்சிப் பகுதியில் 4 இடங்களில் ஒரு மாதத்தில் செயல்விளக்க மையம் தொடங்கப்படும்.
இதன் மூலம் குப்பை சேருவது பெருமளவு குறையும். நகராட்சியின் செலவினமும் குறைவதோடு, மேலாண்மை செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறையும் என்றார்.
தனி இடம் வழங்கக் கோரிக்கை:
கூட்டத்தில் பேசிய ஹோட்டல் உரிமையாளர்கள், நாமக்கல் நகரப் பகுதியில் நகராட்சியால் அடையாளம் காணப்பட்டுள்ள நிறுவனங்கள் குப்பைகளை சேரும் இடத்திலேயே பிரித்துக் கொடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனால் நகராட்சி நிர்வாகம் 3 ஏக்கர் அளவுக்கு இடத்தைக் கொடுத்தால் அங்கு வைத்து குப்பைகளை தரம் பிரித்து வழங்க தயாராக இருக்கிறோம். இதுபோல் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் உணவுக் கழிவுகளை பெற்றுக்கொள்ளவும் நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








