/

நாமக்கல் மாவட்டத்தில் வங்கிக் கடன் இலக்கு ரூ.6,569.29 கோடி

நாமக்கல் மாவட்டத்தில் 2018-19-ஆம் ஆண்டில் ரூ.6,569.29 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 2:40 am

நாமக்கல் மாவட்டத்தில் 2018-19-ஆம் ஆண்டில் ரூ.6,569.29 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2018-2019-ஆம் ஆண்டுக்கான வங்கிக் கடன் திட்ட அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டார். திட்ட அறிக்கையின் முதல் பிரதியை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஏ.சேதுராமன் பெற்றுக்கொண்டார். 
 இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் சி.ஆர்.கோபிகிருஷ்ணன் கடந்த ஆண்டு எய்தப்பட்ட கடன் இலக்கு மற்றும் வங்கியின் செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினார். 
நபார்டு வங்கி தயாரித்த வளம் சார்ந்த கடன் திட்டத்தை கணக்கில் கொண்டு இந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமைக் கடன் திட்டங்களுக்காக ரூ.5,775.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இது கடந்த ஆண்டு கடன் திட்டத்தை விட ரூ.765.39 கோடி அதிகமாகும்.
வேளாண்மை கடன் திட்டங்களுக்காக ரூ.3,343.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இது கடந்த ஒதுக்கீட்டைக் காட்டிலும் ரூ.210.69 கோடி அதிகமாகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ரூ.969.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  பிற முன்னுரிமைக் கடன் திட்டங்களுக்காக ரூ.1,463.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கல்விக் கடனாக ரூ.85.45 கோடியும், வீட்டுக் கடனாக ரூ.205.46 கோடியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தக் கடன் அளவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட வர்த்தக வங்கிகளின் பங்கு ரூ.4,020.40 கோடி, கூட்டுறவு வங்கிகளின் பங்கு ரூ.1,531 கோடி, கிராம வங்கி (பல்வவன் கிராம வங்கி) யின் பங்கு ரூ.176.13 கோடி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பங்கு ரூ.48.32 கோடி ஆகும். 
இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி சேலம் மண்டல உதவி பொது மேலாளர், எ.சந்திரசேகர், மகளிர் திட்ட அலுவலர் மணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மு.முத்தரசு மற்றும் அனைத்து வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.