புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

சிந்தனையை மாற்றினால், வாழ்க்கையை மாற்றிவிடலாம்: கவிஞர் கவிதாசன்

சிந்தனையை மாற்றினால், வாழ்க்கையை மாற்றிவிடலாம் என்றார் கவிஞர் கவிதாசன்.

Updated On :22 அக்டோபர் 2018, 2:35 am

சிந்தனையை மாற்றினால், வாழ்க்கையை மாற்றிவிடலாம் என்றார் கவிஞர் கவிதாசன்.
நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை சார்பில் அப்துல்கலாம், நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் விழா, நாமக்கல் கவிஞர் நற்றமிழ் விருதுகள் வழங்கும் விழா, சிறந்த சாதனையாளர்கள், சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, நூல்கள் வெளியீட்டு விழா என ஐம்பெரும் விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
 நாமக்கல் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆர்.குழந்தைவேலு தலைமை வகித்தார். நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவைத் தலைவர் டி.எம்.மோகன், நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வி. சத்தியமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நாமக்கல் கவிஞரின் மகன் ராஜா வெங்கட்ராமன், பேரன் எச்.பாண்டியன் ஆகியோர் விருதுகளை வழங்கிப் பேசினர்.
நற்றமிழ் விருது பெற்ற கவிஞர் கவிதாசன் பேசியது:
ஒரே ஒரு வார்த்தையில் வாழ்க்கையை மாற்றிவிடலாம். என்னடா வாழ்க்கை என்று சொல்லாமல் இது என்னோட வாழ்க்கை என்று சொன்னால், வாழ்க்கை மாறிவிடும். வாழத் தெரிந்தவனுக்கு வாழ்க்கை ஒரு வரம். வாழத் தெரியாதவனுக்கு வாழ்க்கை ஒரு சாபம்.
நாம் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும். நம் முன்னோர்கள் திசையை எட்டாகவும், இசையை ஏழாகவும், சுவையை ஆறாகவும், நிலத்தை ஐந்தாகவும், காற்றை நான்காகவும், மொழியை மூன்றாகவும், வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாகவும், ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான். அதை உயிரினும் மேலாக வைத்தான். 
நம்முடைய முன்னோர்களுக்கு இருந்த ஞானம், பண்பாடு நமக்கு இல்லை. இந்த வாழ்க்கையைப் பயன்படும் வாழ்க்கையாக மாற்ற வேண்டும். சிந்தனையை மாற்றினால், நம் வாழ்க்கையை மாற்றிவிடலாம் என்றார்.
விழாவில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது ப. முத்துசாமி, இயற்கை விவசாயி விருது என்.காந்தி, சிறந்த நட்சத்திர ஆசிரியர் விருது எம். செல்வகுமாரி, சிறந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் விருது ஆர்.எஸ். பழனிசாமி, சிறந்த சமூக சேவகர் விருது எ. லோகநாதன், நேர்மையின் சிகரம் விருது ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பெ. சஞ்சீவி, சிறந்த சமூக ஆர்வலர் விருது சக்தி கல்வி, கலாசார அறக்கட்டளை நிறுவனர் என்.கே.எஸ். சக்திவேல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதுபோல் மனிதநேய மருத்துவர் விருது அரசு மருத்துவர் என். விஜயகுமார், சிறந்த மனிதநேய நல்லாசிரியர் விருது கை. பெரியசாமி, சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியர் விருது ஆ.ரவீந்தர், சிறந்த மனவளக் கலைக்கான அர்ப்பணிப்பாளர் விருது வி. விஜயலட்சுமி, சிறந்த ரத்ததான தன்னார்வலர் விருது கோ. மணிகண்டன், டாக்டர் அப்துல்கலாம் இளம் சாதனையாளர் விருது வித்யா யுவராஜா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பேரவைச் செயலர் செல்வ. செந்தில்குமார், பொருளாளர் திருக்குறள் ராசா மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.