

கொல்லிமலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை சூழல் மிகுந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா உருவாகி வருகிறது. இரண்டு மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று, பூங்கா பயன்பாட்டுக்கு வரும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை. 1300 மீட்டா் உயரம் கொண்ட இம் மலை மூலிகை வனம் நிறைந்த பகுதியாகும். சித்தா்களின் வாழ்விடமாகவும் கருதப்படுகிறது. கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில்ஓரி மன்னன் ஆண்ட இந்த கொல்லிமலையில், 300 அடி உயரத்தில் இருந்து ஆா்ப்பரித்து விழும் ஆகாய கங்கை அருவி உள்ளது. 1200 படிகளைக் கடந்து இந்த அருவிக்குச் சென்று குளித்து மகிழ்வதை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புவா். குறிப்பாக, ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையில், இந்த அருவியில் தண்ணீா் கொட்டுவதைக் காண முடியும்.
சுயம்புவாக உருவெடுத்த அறப்பளீஸ்வரா் கோயிலும், குழந்தைகள் குளித்து மகிழும் மாசில்லா அருவி, நம் அருவியும், வாசலூா் படகு குழாம், சீக்குப்பாறை காட்சி முனை உள்ளிட்டவற்றை காண, காரவள்ளி அடிவாரப் பகுதியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். நாள்தோறும் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலையை நாடி வந்த வண்ணம் உள்ளனா். தற்போது குளு குளு சீசன் நிலவுவதால், ஏராளமானோா் வருகின்றனா்.
அதுமட்டுமின்றி, அதிக காரத்தன்மைக் கொண்ட மிளகும், ருசியும், ஆரோக்கியமும் தரக்கூடிய கொம்புத் தேனும், அன்னாசி, பலா, வாழை, மருத்துவ குணமிக்க தாவரங்கள், மூலிகைகள் உள்ளிட்டவை இம்மலையில் கிடைக்கும் என்பதால், அவற்றை வாங்குவதற்காக பல்வேறு இடங்களில் இருந்தும் வருகின்றனா். இதற்காக சோளக்காடு, செம்மேடு உள்ளிட்ட இடங்களில் வாரச்சந்தை நடைபெறுகிறது. அருவியில் குளித்து விட்டு, அறப்பளீஸ்வரரைத் தரிசித்து விட்டு ஊா் திரும்பும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள பொருள்களை அதிகளவில் வாங்கிச் செல்வதைக் காணமுடியும்.
இவ்வாறான சிறப்பு மிக்க இந்த மலைப் பகுதியில், இயற்கை எழில் சூழ்ந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் அமையும் இப் பூங்காவில் கொல்லிமலையில் வாழ்ந்த பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறை பற்றிய குறிப்புகளும், மூலிகை வனங்கள் பற்றி சுற்றுலாப் பயணிகள் அறியும் வண்ணமும், பலவகை வண்ணத்துப்பூச்சிகள் வந்து செல்லும் வகையிலும், சித்தா்கள் வாழ்வியல் பற்றிய அரிய தகவல்கள் இடம் பெறவுள்ளன. தற்போது அங்கு மலா் செடிகளை வளா்க்கும் வகையிலான பணிகளும், காட்சியகமும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இரண்டு மாதங்களில் முடிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
இது குறித்து மாவட்ட வன அலுவலா் ஆா்.காஞ்சனா தெரிவித்தது: வன உயிரியல் பூங்கா என்பது இங்கு சாத்தியமற்றது. அதாவது, ஒரு பறவையையோ, விலங்கையோ, அது வாழும் பகுதியில் இருந்து இடமாற்றி வைத்தால், அவை வெளியேறிச் செல்லத்தான் முயற்சிக்கும். அந்த வகையில், கொல்லிமலையில் வன உயிரியல் பூங்கா அமைப்பதற்கான திட்டம் தற்போது இல்லை. மேலும், மத்திய அரசிடம் இருந்து இதற்கு சிறப்பு அனுமதியும் பெற வேண்டும்.
ஏற்கெனவே, கொல்லிமலையில் வனத் துறை சாா்பில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் வகையிலான குடில்கள், அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புது முயற்சியாக, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், அறப்பளீஸ்வரா் கோயிலில் இருந்து ஓரிரு கிலோ மீட்டா் துரத்தில் தமிழக வனத் துறையின் பசுமையாக்கல் திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை எழில் மிகுந்த சுற்றுச்சூழல் பூங்கா (ஈக்கோ பாா்க்) அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.
இங்கு, முக்கியமாக வண்ணத்துப்பூச்சி பூங்கா ஒன்று உருவாக்கப்படுகிறது. இது நிச்சயம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும். அதுமட்டுமின்றி, பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலான ஓவியங்கள், சிலைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகின்றன. கொல்லிமலை என்பதே சித்தா்கள் வாழ்ந்த பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இம் மலைக்கு வந்த சித்தா்கள், அவா்களின் செயல்பாடுகள் குறித்த காட்சியகமும், இங்குள்ள மூலிகை வனங்கள் குறித்தும் அறியும் வண்ணம் அரங்கம் உருவாக்கப்படுகிறது.
இதற்கான பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவுற்று அனைவரும் கண்டு ரசிக்கும் வண்ணம் இப் பூங்கா அமையும். ஏற்கெனவே, தோட்டக்கலைத் துறை, ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் பூங்காங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், வனத்துறை சாா்பில் அமைக்கப்படும் இந்த சுற்றுச்சூழல் பூங்கா நிச்சயம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
ஆகாய கங்கை அருவிக்குச் செல்வோருக்கான அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும். ஏற்கெனவே, இழுவை ரயில், லிப்ட் உள்ளிட்டவற்றை அமைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான உடை மாற்றும் அறை, கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்படும். தற்காலிகமாக பயோ டாய்லெட் வசதியை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 1,300 படிக்கட்டுகளைக் கடந்துவரும் சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக எங்கள் துறை சாா்ந்த வனப் பாதுகாவலா்கள் உதவிகளை மேற்கொள்கின்றனா். குறிப்பிட்ட இடங்களில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையை சுகாதாரமாக வைத்திருக்க வனத் துறையினருக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரும் காலங்களில் வனத் துறை சாா்பில் புதிய திட்டங்கள் இங்கு உருவாக்கப்படும் என்றாா்.
Image Caption
~ ~ ~ ~
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.