தோட்டக்கலைப் பயிரான பாக்கு விவசாயம் தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது. போதிய மழையில்லாததாலும், சரியான விலை கிடைக்காததாலும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் பாக்கு பெயிண்ட் மற்றும் சாய ஆலைகளுக்கு அனுப்பப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், கோவை, தருமபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பாக்கு மரங்கள் உள்ளன. தோட்டக்கலைப் பயிரான இவற்றை வளர்க்க தண்ணீர் முக்கிய ஆதாரமாகும். நீர் இல்லையெனில், பாக்கு மரங்கள் பட்டுப்போய்விடும். அது மட்டுமின்றி, நடுவது முதல் 3 ஆண்டுகள் வரை பாக்கு உற்பத்திக்குக் காத்திருக்க வேண்டும். பாக்கு விவசாயிகளுக்கென அரசுத் தரப்பில் மானியம் ஏதும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் ஒரு சில விவசாயிகள் மட்டுமே பாக்கு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓர் ஏக்கருக்கு 900 பாக்கு மரங்களை நட முடியும். இப் பயிரை நடுவதற்கு முன் அந்தப் பகுதியில் வாழை, அகத்திக்கீரை உள்ளிட்டவற்றைப் பயிரிட வேண்டும். அதன் நிழல் பகுதியில் பாக்கு மரக் கன்றுகளை நட வேண்டும். 100 அடி உயர மரமாக வளர்வதற்கு மூன்று முதல் 5 ஆண்டுகள் வரையாகும். அதன்பின் காற்றில் மரங்கள் சாயாமல், தண்ணீரின்றி கருகாமல் இருந்தால், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் ஜனவரி வரையில் பாக்கு காய்கள் லட்சக்கணக்கில் அறுவடையாகும். இதை அறுவடை செய்வதற்கென தொழிலாளர்கள் உள்ளனர். அனைவராலும் எளிதாக அறுவடை செய்து விட முடியாது. ஒரு பாக்கு மரத்துக்கும், மற்றொரு மரத்துக்கும் இடையே 7 அடி தூரம் இருக்கும். ஒரு மரத்தில் ஏறிவிட்டால், அதில் இருந்து அருகில் உள்ள மரத்துக்குத் தாவிச் சென்று அனைத்து மரங்களில் இருந்தும் பாக்கு காய்களை அறுவடை செய்து விடுவர்.
அதன்பின், மொத்தமாக வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று, அதற்கென உள்ள இயந்திரத்தில் கொட்டி பாக்குக் கொட்டையின் தோலை உறிக்கச் செய்வர். பின்னர் அவற்றைச் சரிபார்த்து விற்பனைக்கு அனுப்புவர். வெற்றிலைக்குப் பயன்படுத்துவதும் இவ் வகை பாக்குகள் தான் என்றாலும், அவற்றின் தேவை என்பது சிறிதளவே. பெரும்பாலும், சாய ஆலைகளுக்குத்தான் அனுப்பப்படுகின்றன. இதற்கென உள்ள இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கிச் சென்று அவற்றை அனுப்பும் பணியை மேற்கொள்வர். சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி பகுதியிலும், நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எருமப்பட்டி பகுதியிலும், தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியிலும், கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், கல்லாறு பகுதியிலும் பாக்கு மரங்கள் அதிகம் உள்ளதால், இடைத்தரகர்கள் மரங்களை குத்தகை அடிப்படையிலும், நேரடி கொள்முதல் என்ற முறையிலும் வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு பாக்கு மூலம் போதிய வருவாய் இல்லை எனக் கூறப்படுகிறது. சரியான மழையில்லாததால் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இடைத்தரகர்களும் குறைந்த விலைக்குக் கேட்பதால், வேறு வழியின்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்து விட்டன. ஒரு மரத்துக்கு ரூ. 7 முதல் 10 தருவதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டும், இதுவரை இழப்பீடு வந்து சேரவில்லை என நாமக்கல் மாவட்ட பாக்கு விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே வெண்டாங்கியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியது: தென்னையைப் போல் பாக்கு மரத்தின் பாகங்கள் அனைத்தும் பயனுள்ளதாகவே இருக்கும். ஓர் ஏக்கரில் 900 மரங்கள் நடுவதற்கும், ஆரம்பம் முதல் அறுவடை வரையிலும் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும். மழை, நீர் பற்றாக்குறையின்றி இருந்தால், பாக்கு விவசாயம் நல்ல முறையில் நடைபெறும். அவ்வாறான சூழலில் ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும். மழை இல்லாமல், காற்று அதிகம் இருந்தால் மிகுந்த பாதிப்பு உண்டாகும்.
அறுவடை செய்த பாக்கு காய்களைச் சுத்தம் செய்து வேகவைத்து இடைத்தரகர்களிடம் கொடுப்போம். 6 கிலோ பச்சைப் பாக்குகளை வேகவைத்தால் ஒரு கிலோ வரையில் நல்ல பாக்குகள் கிடைக்கும். கிலோவுக்கு ரூ.40 வீதம் 6 கிலோவுக்கு ரூ.240 வரை கிடைக்கும். இவற்றை வாங்கிச் செல்லும் இடைத்தரகர்கள், வியாபாரிகள், அதன்பின் கலர் ஏற்றி விற்பனைக்கு அனுப்பும் பணியை மேற்கொள்வர். சாயப்பட்டறை மற்றும் பெயிண்ட் நிறுவனங்களுக்கு பாக்குகளை அனுப்புவதாகக் கூறப்படுகிறது. அது பற்றி முழுமையாக விவரம் தெரியவில்லை. நாங்கள் கொடுக்கும் விலையில் இருந்து ரூ.100 அதிகம் வைத்து அவர்கள் விற்பனை செய்யலாம்.
தற்போதைய சூழலில் பாக்கு விவசாயத்தால் பாதிப்பு தானே தவிர, லாபம் ஏதுமில்லை. மற்ற வேளாண் பயிர்களுக்கு கருணை காட்டும் அரசு, காற்றால் சாயும் பாக்கு மரங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அதன் விவசாயிகளுக்கு மானிய உதவி அளிக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.