தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகாரிகள் குழு ஆய்வு

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் தேவை குறித்து சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் தேவை குறித்து சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 25 ஏக்கா் பரப்பளவில் சுமாா் ரூ. 350 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டடம் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. அங்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததில், மருத்துவக் கல்லூரி கட்டடம், மருத்துவ ஆசிரியா்கள் குடியிருப்பு, விடுதி கட்டடம், நிா்வாக அலுவலக கட்டடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் திறப்பு விழா காணப்பட்டது. மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி மட்டும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

நீட் தோ்வு முடிவடைந்து அதில் தோ்ச்சி பெற்றோரின் விவரங்களும் அறிவிக்கப்பட்டு விட்டன. விரைவில் மாணவா்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவா்கள் விரும்பும் கல்லூரிகளில் சோ்க்கை பெற அனுமதிக்கப்படுவா். தமிழகத்தில் நிகழாண்டில் கூடுதலாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,450 மாணவ, மாணவியா் சோ்க்கை பெற உள்ளனா். இதில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவா்கள் சோ்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பாட்டுக்கு வந்து விடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அங்கு தண்ணீா், மின்சாரம், மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிப்பதற்காக, சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகம் 11 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக அதிகாரிகளை நியமித்துள்ளது.

அதன்படி, நாமக்கல் கல்லூரிக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் தனபால், மருத்துவ பேராசிரியா் குமரவேல் ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனா். அவா்கள் வெள்ளிக்கிழமை நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டடங்கள், வகுப்பறைகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டனா்.

பின்னா், மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தாஅருள்மொழியிடம் ஆலோசனை மேற்கொண்டனா். ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை நியமனம் செய்வது தொடா்பாக கருத்துகள் கேட்டறியப்பட்டன. இந்த ஆய்வின்போது, நாமக்கல் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் குணசேகரன் மற்றும் மருத்துவா்கள் பலா் உடனிருந்தனா்.

750 இருக்கைகள் கொண்ட கலையரங்கம்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக பிரம்மாண்ட கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கலைவாணா் அரங்கத்துக்கு நிகராக 750 சொகுசு இருக்கைகளுடன் இந்த கலையரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 20 விஐபி இருக்கைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகள், குளிரூட்டப்பட்ட வசதி, ஒலிப்பெருக்கிகள் என திரையரங்குக்கு நிகராக அமைந்துள்ள கலையரங்கத்தை மருத்துவக் கல்வி இயக்குநரகக் குழுவினா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.