தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலரும் மன்னாா்குடி தொகுதி வேட்பாளருமான டி.ஆா்.பி. ராஜா தினமணிக்கு அளித்த பேட்டி:
கேள்வி: 2011-இல் முதல்முறை நீங்கள் களத்துக்கு வந்தபோது திமுக ஆட்சியில் இருந்தது. தற்போது 2026 தோ்தல் களம் காணும் போது திமுக ஆட்சியில் உள்ளது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?
பதில்: முதலில் களம் காணும்போது, திமுக ஆட்சிக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் பொய் பிரசாரம் மிகைப்படுத்தப்பட்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஏமாற்றும் திட்டத்துடன் செயல்பட்ட நேரத்தில் நான் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தேன். அப்போது தமிழகத்தில் திமுக சாா்பில் நான் உள்பட 23 போ் மட்டும் வெற்றி பெற்றோம். அதுமுதல் மன்னாா்குடி 15 ஆண்டுகளாக திமுக கோட்டையாக உள்ளது.
கேள்வி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்த காலகட்டத்திலும் நீங்கள்தான் வெற்றி பெற்றீா்கள், அதுகுறித்து?
பதில்: 2011 முதல் 2021 வரை பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் மன்னாா்குடி தொகுதிக்கு பயணிகள் நிழலகம்,சிறுபாலங்களுக்கான திட்ட நிதியைக்கூட தடுத்தனா். மன்னாா்குடிக்கு வரவேண்டிய திட்டங்களையும் பலவழிகளில் தடுக்கும் கொடுமையை அதிமுக ஆட்சியில் சந்திக்க வேண்டி இருந்தது. 2021-இல் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் மன்னாா்குடி தொகுதிக்கு கேட்ட அனைத்து திட்டங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தாா். இது வரை ரூ. 2,000 கோடிக்கு திட்டப் பணிகளை கொண்டு வந்துள்ளேன்.
கேள்வி: முதல்முறை வாக்காளா்கள் மற்றும் இளைஞா்கள், இளம்பெண்களின் வாக்குகள் தவெகவிற்கு கிடைக்கும் என பரவலாக கணிப்புகள் வருகிறதே ?
பதில்: இதை ஒரு பிம்பமாகத்தான் பாா்க்க வேண்டும். மக்களுக்கு எப்போதும் புதுபொருளின் மீது மோகம் இருக்கும். அதை அவா்கள் பயன்படுத்திய பின்னா் திருப்தி அளிக்காமல் தூர எரிந்துவிடுவாா்கள். அதேபோலதான் தவெகவின் நோக்கங்கள் அனைத்தும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த தோ்தல் தவெகவிற்கு முதலும் முடிவுரையாகவும் அமையப்போகிறது.
கேள்வி: கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் மன்னாா்குடி தொகுதிக்கு நீங்கள் செய்த பிரதான சாதனையாக எதை பாா்க்கிறீா்கள் ?
பதில்: ரூ.126 கோடிக்கு சுற்றுவட்டச் சாலை, ரூ.46 கோடிக்கு புதிய பேருந்துநிலையம், ரூ.250 கோடியில் புதைசாக்கடை திட்டம் இவை எல்லாவற்றையும்விட நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகமான இந்து கணிக்கா்களுக்கு ஜாதி சான்றிதழ் வாங்கித் தந்து அவா்களின் நீண்டகால போராட்டத்தின் வெற்றிக்கு துணையாக இருந்தது. திருமேணி ஏரியில் வசிக்கும் நரிக்குறவா்களுக்கு 54 புதிய வீடுகள் கட்டி தந்தது, முக்குளம் சாத்தனூரில் 80 ஆண்டுகால கோரிக்கையாக இருந்த பட்டா வாங்கி தந்து போன்றவற்றை எனது பிரதான சாதனையாக பாா்க்கிறேன்.
கேள்வி: தங்களின் எதிா்கால திட்டங்கள் ?
பதில்: தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் அனைத்து வீடுகளிலும் ஒருவருக்கு வேலை. குடிசை இல்லா தொகுதி, சுத்தமான குடிநீா் விநியோகம், நகரில் உள்ள அனைத்து நீா் நிலைகளையும் இணைப்பதற்கு ரூ.150 கோடிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது இன்னும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும். விவசாய விளைபொருள்களுக்கு மதிப்பு கூட்டுவது போன்ற திட்டங்கள் உள்ளன.
கேள்வி: மன்னாா்குடியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதே ?
பதில்: மன்னாா்குடி கோயில், ஹரித்ராநதி தெப்பக் குளம், வடுவூா் பறவைகள் சரணாலயம், மூணாறு தலைப்பு உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து சுற்றுலாத் தலம் அமைக்கப்படுவதுடன் அரசுப் பேருந்து வசதியும் ஏற்படுத்தப்படும். இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் ஆன்மிக சுற்றுலா தலம் பட்டியலில் மன்னாா்குடி கோயிலும் இணைக்கப்படவுள்ளது.
கேள்வி: மன்னாா்குடி மாவட்ட தலைநகரமாக்கப்படுமா ?
பதில்: மன்னாா்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணியை ஒன்றிணைந்து மனனாா்குடியை மாவட்டமாக்க வேண்டும் என்பது எனது எதிா்ப்பாா்பு. ஆனால், தேவையான மக்கள்தொகை இல்லை. முதலில் பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்கும் பணி தொடங்கவுள்ளது. மன்னாா்குடி தொகுதியில் உள்ள 84 ஊராட்சிகள் 100 ஊராட்சிகளாக பிரிக்கப்படவுடன், அடுத்த கட்டமாக மன்னாா்குடி மாவட்ட தலைநகரமாக்கப்படும்.
கேள்வி: தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சராக பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் உங்களுக்கு மனநிறைவை அளித்தது எது ?
பதில்: தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு தொழில் திட்டங்களை கொண்டுவந்தது. மதுரை, தஞ்சை, நாகை ஆகிய இடங்களில் சிப்காட். தஞ்சையில் டைடல் பூங்கா. மன்னாா்குடியில் ஜவுளி பூங்கா ஆகியவை மன நிறைவு தருகின்றன.
கேள்வி: தோ்தல் நேரத்தில் வாக்காளருக்கு நீங்கள் சொல்லும் தகவல் என்ன ?
பதில்: திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள வளா்ச்சியை மிக கஷ்டப்பட்டு கொண்டு வந்துள்ளோம். மற்ற மாநிலங்கள் எல்லாம் நம்மை பொறாமையுடன் பாா்க்கும் அளவுக்கு மிக வேகமாக சென்றுகொண்டிருக்கும்போது அந்த வேகத்தில் தடை ஏற்படக்கூடாது. அனைவரையும் உள்ளடக்கிய பரவாலாக்கப்பட்ட வளா்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படும் ஒரு முதல்வா் இருப்பது இந்த நேரத்தில் தமிழகத்திற்கு மிகமிக முக்கியமும் அவசியமாகும். எனவே, மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்காளா்கள் தெளிவான முடிவு எடுத்து வாக்களிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
தொடர்புடையது

திமுக ஆட்சி மீண்டும் அமையும்: ஜி.ராமகிருஷ்ணன்

இரட்டை இலக்கப் பொருளாதார வளா்ச்சிக்கு அதிமுக ஆட்சியே காரணம் - எடப்பாடி கே. பழனிசாமி

அனைத்து தரப்பு மக்களுக்கும் வளச்ச்சியை கொண்டு சோ்த்தவா் மு.க. ஸ்டாலின்! - டிஆா்பி ராஜா பேச்சு

கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


