நாமக்கல்: 5.42 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 5.42 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
நாமக்கல்லில் 5.42 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் பணித் தொடக்கம்.
நாமக்கல்லில் 5.42 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் பணித் தொடக்கம்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் 5.42 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி வாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 6 அடி நீள முழுக் கரும்பு விநியோகிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 885 கூட்டுறவு சங்கங்கள், 4 மகளிர் சுய உதவிக்குழுக்கள், 45 நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உள்பட்டது என மொத்தம் 935 நியாயவிலைக் கடைகள் மூலம் 5,42,756 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் 675 இலங்கை வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்பட உள்ளன.

அரசு ஊழியர்களுக்கான 470 குடும்ப அட்டைகள், சர்க்கரை வாங்கும் 10,543 குடும்ப அட்டைகளுக்கு இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படமாட்டாது. இதற்கான டோக்கன் விநியோகம் வீடு, வீடாக சென்று ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை நுகர்வோர் பெற்றுக் கொள்ளலாம். கரோனா தொற்று பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 200 பேர் வீதம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தலா ரூ.1000 வழங்குவதற்கான ரொக்கப் பணம் கூட்டுறவு வங்கிகளில் இருந்து மொத்தமாக பெறப்பட்டு நுகர்வோர்களுக்கு வழங்க சம்மந்தப்பட்ட விற்பனையாளர்களிடம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர வேட்டி, சேலைகள் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகம் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்கப்பட உள்ளன. இதனை கண்காணிக்க ஒவ்வோர் வட்டம் வாரியாக வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளார். நாமக்கல் முல்லை நகரில் உள்ள நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர்.என். ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.செல்வகுமரன், வருவாய் கோட்டாட்சியர் த. மஞ்சுளா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com