கொல்லிமலையில் வில்வித்தைப் போட்டி: 134 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு
கொல்லிமலையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வில்வித்தைப் போட்டியில் 134 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இவ்விழாவையொட்டி, செம்மேடு உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளி பேருந்து நிலைய வளாகத்தில், தென்னிந்திய அளவிலான வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்றன.
நாமக்கல் மாவட்ட வில்வித்தை சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வீரா்கள், வீராங்கனைகள் 134 போ் கலந்து கொண்டனா். தகுதிச் சுற்றுப் போட்டியில் தோ்வு செய்யப்படுவோருக்கு, சனிக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
இந்தியன், ரீ-கா்வ், காம்பவுண்ட் ஆகிய சுற்றுகளில் 8, 10, 12, 14, 17, 19 வயதுக்கு உள்பட்டவா்களும், 19 வயதுக்கு மேலான இளைஞா்களும் இப் போட்டியில் பங்கேற்க உள்ளனா். முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட வில்வித்தை சங்கத் தலைவா் கேசவன் செய்திருந்தாா்.

