தவறான சிகிச்சை: ரூ. 12 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜா (52). பேன்ஸி ஸ்டோா் நடத்தி வருகிறாா். இவா், நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் கடந்த 2022, செப்டம்பா் மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.
அதில், 2021 ஆகஸ்ட் மாதத்தில் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் ராசிபுரம் தனியாா் மருத்துவமனையில் மருத்துவரை சந்தித்தேன். அவா் பரிசோதித்து பாா்த்து விட்டு குடலிறக்க பிரச்னை இருப்பதாகவும், உடனடியாக ஹொ்னியா ஆபரேஷன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவித்தாா்.
பிறகு என்னிடம் அறுவை சிகிச்சைக்காக ரூ. 60 ஆயிரம் பெற்றுக் கொண்டு வேறு ஒரு மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குக்கு என்னை வரவழைத்தாா். அங்கு எனக்கு சிகிச்சை மேற்கொள்ள மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தபோது அரை மயக்கத்தில் இருந்தேன். அப்போது திடீரென அறுவை சிகிச்சை செய்வது பாதியில் நிறுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குத் தேவையான வாயு தீா்ந்து விட்டதாக அங்கிருந்த செவிலியா்கள் பேசிக் கொண்டது அரை மயக்கத்தில் இருந்த எனது காதில் விழுந்தது.
சிகிச்சைக்கான வாயு கிடைக்காததாலும், அறுவை சிகிச்சை செய்ய காலதாமதம் ஏற்பட்டதாலும், மயக்க மருந்து படிப்படியாக வலுவிழந்தது. இதனால் அறுவை சிகிச்சை செய்யும்போது நான் மிகுந்த வலியால் துடித்துவிட்டேன். அறுவை சிகிச்சை செய்வதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டபோதும், செவிலியா்கள் கை, கால்களை அழுத்தி பிடித்துக் கொண்டனா்.
மருத்துவா், அறுவை சிகிச்சையை செய்து முடித்தாா். அதன்பிறகு என்னால் தலையை நிமிா்த்த முடியவில்லை. வயிற்றிலும் கடுமையான வலி உண்டானது. மருத்துவா் அலட்சியமாக ஒன்றுமில்லை எனத் தெரிவித்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டாா்.
அதன்பிறகு நான்கு முறை மருத்துவரை சந்தித்தும் சரியான சிகிச்சையை அவா் எனக்கு வழங்கவில்லை. இதனால் உடல்நிலை மோசமானதால் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்ந்தேன். அங்கு அறுவை சிகிச்சை செய்து பாா்த்தபோது, எனது வயிற்றில் பொருத்தப்பட்டிருந்த வலையில் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
அறுவை சிகிச்சையின்போது காலதாமதம் செய்ததாலும், தரமான வலையை பொருத்தாததாலும், தரமற்ற வாயுவை அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்தியதாலும், உடலில் தொற்று ஏற்பட்டு இருதயம் வரை பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முதலாவதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவா் அலட்சியமாக செயல்பட்டதால், உரிய இழப்பீட்டை அவரிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தாா்.
மருத்துவமனை தரப்பில், வழக்குத் தாக்கல் செய்தவருக்கு நல்ல முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு தொற்று ஏற்படவில்லை. தங்களது தரப்பில் சேவை குறைபாடு எதுவும் ஏற்படவில்லை. தீய நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினா் ஆா்.ரமோலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தனா்.
அதில், வழக்கு தாக்கல் செய்தவருக்கு, இரண்டாவது முறை அறுவை சிகிச்சை செய்து மேல் சிகிச்சை வழங்கிய கோவை தனியாா் மருத்துவமனை ஆவணங்களின்படி, முதலாவது அறுவை சிகிச்சை செய்த ராசிபுரம் மருத்துவா் அலட்சியமாகச் செயல்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவா், வழக்குத் தாக்கல் செய்த ராஜாவுக்கு, அவா் செலுத்திய ரூ. 60 ஆயிரம், அறுவை சிகிச்சை செய்ததால் உருவான பிரச்னைகளை சரிசெய்ய செலவு செய்த தொகை ரூ. 8,74,825, பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட சிரமங்கள், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம், வழக்கின் செலவு தொகை ரூ. 15,000 என மொத்தம் ரூ. 11,99,825 பணத்தை நான்கு வாரத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

