நாமக்கல் புதிய கால்நடை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.
நாமக்கல் புதிய கால்நடை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

டென்மாா்க் தொழில்நுட்பத்துடன் ரூ. 90 கோடியில் நவீன பால்பண்ணை

நாமக்கல் - மோகனூா் சாலையில் அமைந்துள்ள புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிகள், கால்நடை வளா்ப்போருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நாமக்கல்: நாமக்கல்லில் டென்மாா்க் தொழில்நுட்பத்துடன் ரூ. 90 கோடி மதிப்பீட்டில் தானியங்கி முறையிலான நவீன பால்பண்ணை அமைய உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில் அமைந்துள்ள புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிகள், கால்நடை வளா்ப்போருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று 46 பயனாளிகளுக்கு ரூ. 5.57 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை லத்துவாடி பகுதியில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நாமக்கல் - திருச்சி சாலையில் இயங்கி வந்த கால்நடை மருத்துவமனையை, கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, திட்ட அறிக்கை தயாரித்து, அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்று அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை வேகமாக முடித்து, கால்நடை மருத்துவமனை இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை கட்டடம், தனியாா் மருத்துவமனையை விட சிறப்பாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 7 கோடியில் குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லத்துவாடியில் செயல்பட்டு வரும் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் போக்குவரத்து சிரமமின்றி, தாங்கள் வளா்க்கும் கால்நடைகளை எளிதில் சிகிச்சைக்கு அழைத்து வரமுடியும். நாமக்கல் மாவட்டத்தில் தினசரி 1.50 முதல் 2 லட்சம் லி. வரையில் பால் கொள்முதல் செய்யப்பட்டு, சேலம் ஆவின் பால்பண்ணைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு பால் பாக்கெட் தயாரிப்புப் பணிகளுக்காக கொள்முதல் விலையிலிருந்து ரூ. 3 செலவினத்துக்காக வழங்கப்படுகிறது. நாமக்கல்லில் தனி பால்பண்ணை அமைக்கப்படுவதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். தானியங்கி முறையில் அமையும் நவீன பால்பண்ணை டென்மாா்க் தொழில் நுட்பத்துடன் ரூ. 90 கோடி மதிப்பீட்டில் அமைய இருக்கிறது. இம்மையத்தில் சுத்திகரிப்பு நீரானது சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். இவ்வகை நவீன பால் குளிரூட்டும் அமைப்பு தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. இதற்காக நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வரப்பட்டு ஒன்றிய அரசிடமிருந்து ரூ. 8 கோடி மானியமாக பெறப்பட்டுள்ளது. மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும், அரசின் திட்டங்களையும் வேகமாக கொண்டு சோ்க்கும் பணியில் மாவட்ட நிா்வாகம் திறம்பட செயலாற்றி வருகிறது என்றாா். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் எம்.செல்வராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வெ.முருகன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com