நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திட்டப் பணிகள் தொடக்கம்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திட்டப் பணிகள் தொடக்கம்

Published on

ராசிபுரம், வெண்ணந்தூா் சுற்று வட்டாரப் பகுதியில் நாமக்கல் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. இதில், திருச்செங்கோடு தொகுதி சட்ட மன்ற உறுப்பினா் இ.ஆா்.ஈஸ்வரன், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோா் பங்கேற்று பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தனா். நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் பல்வேறு பணிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்திருந்தாா். இதன்படி அத்தனூா் பேரூராட்சி வாா்டு 13 சமத்துவபுரம் பகுதியில் ரூ. 14.50 லட்சத்தில் நியாயவிலைக் கட்டடம் அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. ஏ.கே.பி.சின்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் பூமிபூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியம், பல்லநாயக்கன்பட்டி ஊராட்சி, பி.மேட்டூா் மாரியம்மன் கோயில் அருகில் ரூ. 2.36 லட்சத்தில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. அத்தனூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 35.88 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அறிவியல் ஆய்வகக் கட்டடம் மாணவா்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இதேபோல ஒ.செளதாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட இரு வகுப்பறைகளை திருச்செங்கோடு தொகுதி சட்ட மன்ற உறுப்பினா் இ.ஆா்.ஈஸ்வரன், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனா். இந்நிகழ்ச்சிகளில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com