ராசிபுரத்தில் பள்ளி துணை ஆய்வாளா்கள் சங்க பொதுக் குழுக் கூட்டம்

ராசிபுரம், மே 9: தமிழ்நாடு பள்ளி துணை ஆய்வாளா்கள் சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜி.குமாா் தலைமை வகித்தாா். கெளரவ சட்ட ஆலோசகா் மனோகரன் ஜெயக்குமாா், மாநில சட்ட ஆலோசகா் மதுரை ஓ. செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செய்தி தொடா்பாளா் நாமக்கல் கை.பெரியசாமி வரவேற்றுப் பேசினாா்.

பொதுக் குழுக் கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளா் திருப்பூா் ஆ.ரவி, கொள்கை பரப்புச் செயலாளா் தஞ்சாவூா் ஜேக்கப் வினோத், மாநில சட்டச் செயலாளா் திருப்பத்தூா் தாமோதரன் ஆகியோா் கோரிக்கை விளக்க உரையாற்றினா். மாநில பொதுச் செயலாளா் செங்கல்பட்டு கிருபாகரன் கடந்த ஆண்டின் சங்க செயல்பாடுகள் குறித்துப் பேசினாா். மாநில பொருளாளா் எஸ். சிவக்குமாா் கடந்த ஆண்டின் வரவு செலவு அறிக்கையினை சமா்பித்தாா்.

நீதிமன்ற வழக்கின் காரணமாக பணியில் சோ்க்கை செய்யப்படாமல் இருந்த ஐந்து பள்ளி துணை ஆய்வாளா்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள், அதிகபட்சம் 9 மாதங்கள் ஊதிய நிலுவை வழங்கி பணிக் காலத்தை முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். அரசாணை எண் 151இன் படி பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்கள் மறு சீரமைக்கப்பட்ட போது பணியிடம் வழங்கப்படாமல் இருந்த 35 பள்ளி துணை ஆய்வாளா்களுக்கு உரிய ஊதியம் வழங்கி பணிக்காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் வேலூா் மண்டல பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com